சட்டமன்ற தேர்தல்… வேட்பாளர்களின் கவனத்துக்கு… சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!
Social Media Political Advertisement: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்சி சார்ந்த விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு
தமிழகம், புதுவை, மேற்கு வங்கம், கேரளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வெ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள், அந்த கட்சிகளின் வேட்பாளர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களது கட்சி சார்ந்த விளம்பரங்களை தொலைக்காட்சி, வானொலி, வாய்ஸ் ரெக்கார்டு செய்திகள், எஸ்எம்எஸ் செய்திகள் போன்ற மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முறையான அனுமதியை பெற வேண்டும். இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாநில அளவிலான ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடமும், சுயேட்சை வேட்பாளர்கள் மாவட்ட அளவிலான ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.
பிரமாண பத்திரத்தில் சமூக வலைதள கணக்கு விவரங்கள் சேர்க்க வேண்டும்
இதே போல, தேர்தலில் வெளிப்படை தன்மையை வெளிப்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, பிரமாண பத்திரத்தில் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் சட்டமன்றத் தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் தங்களது தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்த விரிவான அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய முடியும்
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இதன் காரணமாக, வேட்பாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செலவுகளையும் கண்காணிப்பதற்கு தனியாக தேர்தல் செலவின குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்பாளர்கள் தங்களுக்கான தேர்தல் செலவினங்களை அறிக்கையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
சமூகவலைதளங்களில் ஒழுங்கு முறையை கடைப்பிடிப்பதற்காக
இதில், வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் அரசியல் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதிலும், கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த விளம்பரங்களை மேற்கொள்வதற்கு முறையான முன் அனுமதியை பெற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் படிக்க: S.P. Velumani Tamil Nadu Election: தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவாரா எஸ்.பி.வேலுமணி!