தனியார் மருத்துவக் கல்லூரி மாடியில் இருந்து விழுந்த மாணவர் பலி.. தற்கொலையா? தற்செயலா? போலீசார் விசாரணை!
Tiruvallur Crime : திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மருத்துக் கல்லூரியில் 5- ஆவது மாடியில் இருந்து மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக திருவள்ளூர் கிராமிய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரகு. இவரது மகன் ஆசிர் ( 20 வயது) இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் பாண்டூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து 2- ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்த நிலையில், ஆசீர் வழக்கம் போல விடுதியில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் கல்லூரி முடிந்து 5- ஆவது தளத்தில் உள்ள தனது வகுப்பில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, மாணவர் ஆசிர் 5- ஆவது தளத்தில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவர் ஆசிர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மாணவர் ஆசிரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சையில் பிரிந்த மாணவர் உயிர்
அங்கு, அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி தீவிர சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், போரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவர் ஆசிர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, மாணவர் ஆசீர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாணவர் தரப்பினர் திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் இன்று மழையும் கொட்டும்.. அதிக வெப்பநிலையும் இருக்கும்.. வானிலை எச்சரிக்கை!!




மருத்துவக் கல்லூரியில் போலீசார் விசாரணை
அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த மாணவரின் உடலை போலீசார் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கல்லூரிக்கு நேரடியாக சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
மாணவர் உயிரிழப்புக்கான காரணம் என்ன
இதில், மாணவர் ஆசிர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்தில் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தாரா என்பவர் அல்லது மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: பள்ளிகளுக்கு லீவு வந்தாச்சு! இனி கொண்டாட்டம் தான் – எப்போதிருந்து தெரியுமா?
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)