234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பகுதியில் மட்டும் ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 233 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இவர்களை ஆதரித்து தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
காரைக்குடியில் நாளை விஜய் பிரச்சாரம்:
அந்த வகையில், ஏப்ரல் 10ஆம் தேதி (நாளை) காரைக்குடி மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்பு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய்க்கு லட்சக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிறகு, சுமார் 11 கிலோமீட்டர் தூரம் ரோட் ஷோ மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள், பல்வேறு பரிசுகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் படிக்க: பழனிச்சாமிக்கெல்லாம் பதில் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வருத்தம்!
இதனைத் தொடர்ந்து, நாளை காரைக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, சென்னையிலிருந்து காலை தனி விமானம் மூலம் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி செல்ல திட்டமிட்டுள்ளார்.
அனுமதி கிடைக்குமா?
அங்கு சிலை அருகே மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பிரச்சார கூட்டம் நடத்த அனுமதி கோரி, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி, பிரச்சாரம் நடைபெறவுள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது, கூட்டத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், மக்கள் அதிக அளவில் கூடினால் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன என்பன குறித்து கட்சித் நிர்வாகிகளிடம் விசாரிக்கப்பட்டது.
நாளை தேர்தல் பிரச்சாரத்திற்காக காரைக்குடி வர உள்ள விஜய், மாவட்ட எல்லையிலிருந்தே ரோட் ஷோ மூலம் மக்களை சந்திப்பார் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் சூழலில் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.