பள்ளிகளுக்கு லீவு வந்தாச்சு! இனி கொண்டாட்டம் தான் – எப்போதிருந்து தெரியுமா?
Summer Vacation Announced: தமிழகத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகிற ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் வருகிற ஏப்ரல் 16- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி, ஏப்ரல் 17- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வருகிற ஏப்ரல் 16- ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து. ஏப்ரல் 17- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளிக்கு வர வேண்டும்
மேலும், ஏப்ரல் 25- ஆம் தேதி வரை அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் உள்பட அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வருகை தரவேண்டும். அவர்கள் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணி, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை பணி, அதன் நிர்வாகம் சார்ந்த பணி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி.. “சிங்கிள் டிஜிட்” மோதல்… எத்தனை பேர் தெரியுமா!




ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும். 2026-2027 புதிய கல்வி ஆண்டில் ஜூன் 1- ஆம் தேதி ( திங்கள்கிழமை) முதல் அனைத்து வகை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதில், 1- ஆம் வகுப்பு முதல் 3- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
எனவே, இந்த 3 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஜூன் 1- ஆம் தேதி முதல் 3- ஆம் தேதி வரை மாவட்ட அளவில் பணியிடை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக 1- ஆம் வகுப்பு முதல் 3- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 4- ஆம் தேதி ( வியாழக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்திலேயே அதிகம்.. 73 வேட்பாளர்கள் களம் காணும் “ஹாட்” தொகுதி எது தெரியுமா?