விஜய்யுடன் இருப்பது எந்த காங்கிரஸ் கட்சி தெரியுமா… கர்நாடக துணை முதல்வர் வைத்த ட்விஸ்ட்!
Tvk Leader Vijay- Congress Party : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் தான் காங்கிரஸ் கட்சி இருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். ஆனால், அந்த காங்கிரஸ் தமிழ் மாநில காங்கிரஸ் என்று ட்விஸ்ட் வைத்து பேசினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடும் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 9) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெல்லையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உண்மையான காங்கிரஸ் கட்சி நம் பக்கம் இருக்கிறது எனவும், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் கட்சியை சில பல கோடிகள் கொடுத்து வாங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு முதிர்ச்சியற்ற தலைவர். அரசியலைப் பொறுத்தவரை, தவெக தலைவர் விஜய் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை.
தவெகவுடன் இருப்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயுடன் இருப்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியாக இருக்கலாம். ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தான் இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் எண்ணிக்கையை திமுக குறை கூறினாலும் நாங்கள் தமிழகத்தில் வலுவாக இருக்கிறோம் என்று தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக தலைமையிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் ஆகிய கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது.
மேலும் படிக்க: தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி?.. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?..
காங்கிரஸ் கட்சிக்கு தவெக அளித்த அதிரடி ஆஃபர்கள்
இதனை திமுக தலைமை அளிக்கவில்லையெனில், தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து விடுவதாகவும், அதற்காக தவெக 60 சட்டமன்ற தொகுதிகள், துணை முதல்வர் பதவி, உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு ஆபர்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒப்புதலின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார்.
காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில்…
இதனால், இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்து, தமிழக வெற்றி கழகம்- காங்கிரஸ் என்ற புதிய கூட்டணி உருவாகும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை கைவிட்டு விட்டு திமுக கூட்டணியில் தொடர்வதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்தது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைமையும், தமிழக காங்கிரஸ் தலைமையும் வெவ்வேறு விதமாக கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, அண்மையில் புதுச்சேரிக்கு பிரசாரத்து வந்த ராகுல் காந்தி தமிழகத்துக்கு வராமலும், மு.க.ஸ்டாலினை சந்திக்காமலு் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நாளை காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்.. ரோடு ஷோக்கு அனுமதி கிடைக்குமா?