தமிழகத்தில் முதன் முறையாக வாக்களிக்கும் 14.59 லட்சம் பேர்.. வெளியான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல்..
Tamil Nadu Assembly Election: தமிழகத்தின் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான பகுதிகளாக 3,222 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடிகளில் முழுமையான சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலின்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர்.
சென்னை, ஏப்ரல் 8, 2026: தமிழகத்தில் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிதாக 6,35,911 வாக்காளர்கள் சேர்ந்ததால், தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,73,43,291 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் முழு வீச்சில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டாயர் செய்தியாளர்களை சந்தித்தபோது, பொது தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது வரை 75,032 வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: “ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு”.. வேளச்சேரி பரப்புரையில் இபிஎஸ் விளாசல்!!
தேர்தல் பணிகள் – ஏற்பாடுகள் தீவிரம்:
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான பகுதிகளாக 3,222 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடிகளில் முழுமையான சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான ஒருங்கிணைந்த வேட்பாளர் பட்டியல்:
இந்த நிலையில், வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலின்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இதில் ஆண்கள் 2,80,30,658 பேரும், பெண்கள் 2,93,04,905 பேரும் அடங்குவர். மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் 12,74,247 பேர் அதிகம் உள்ளனர்.
மேலும் படிக்க: கிடைத்தது அனுமதி… விஜய் பேச்சுக்கு தயாராகும் கடலூர்… நாளை பிரம்மாண்ட பரப்புரை!
மேலும், தமிழகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் உரிமையை 14,59,039 இளம் வாக்காளர்கள் பெற்றுள்ளனர். இதில் இளைஞர்கள் 7,62,038 பேரும், இளம்பெண்கள் 6,96,632 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 99 பேரும் அடங்குவர். புதிதாக வாக்குரிமை பெற்றவர்களில் பெண்களை விட ஆண்கள் 65,676 பேர் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்ட 10,62,752 முதிய வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.