Puducherry Elections 2026 : புதுச்சேரியில் இன்று ஆட்சி அதிகாரத்துக்கான தேர்தல் போர்… கோட்டையில் கொடி நாட்டப்போவது யார்!
Puducherry Assembly Elections 2026 : புதுச்சேரி மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் தேஜ கூட்டணி, இண்டி கூட்டணி, நாதக, தவெக என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் முடிவுகள் மே 4- ஆம் தேதி தெரியவரும்.

புதுச்சேரி தேர்தல்
புதுச்சேரி மாநிலமானது யூனியன் பிரதேசமாக செயல்பட்டு வருகிறது. இங்கு, புதுச்சேரி பிராந்தியத்தில் 23 சட்டமன்ற தொகுதிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளும், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் தலா 1 சட்டமன்ற தொகுதிகளும் என 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போது, புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக என்.ரங்கசாமி இருந்து வருகிறார். மாநில உள்துறை அமைச்சராக ஆ. நமச்சிவாயம் இருந்து வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு வருகிற ஜூன் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 9) சட்டமன்றத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேஜ கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவி வருகிறது.
புதுச்சேரி தேர்தல் களத்தில் 294 வேட்பாளர்கள் போட்டி
அதன்படி, இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள். இதே போல, காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் இண்டி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் (5 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் நேரடி போட்டி), தேசிய கட்சி வேட்பாளர்கள் 34 பேர், மாநில கட்சி வேட்பாளர்கள் 63 பேர், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகளின் வேட்பாளர்கள் 80 பேர், 117 சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் படிக்க: காங்கிரஸை முதல் முறை கடுமையாக விமர்சித்த விஜய்… என்ன சொன்னார் தெரியுமா?
புதுச்சேரி மாநிலத்தில் 1,099 வாக்குச்சாவடிகள்
இந்த தேர்தலுக்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் சுமார் 1,099 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5.03 லட்சம் பெண் வாக்காளர்களும், 4.40 லட்சம் ஆண் வாக்காளர்களும் என மொத்தம் 9 லட்சத்து 50 ஆயிரத்து 311 வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
மே 4- ஆம் தேதி தெரியும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) ஒரே கட்டமாக எண்ணப்பட்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, இந்த தேர்தலில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறதா அல்லது முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறதா என்பது தெரிய வரும். அரசியலுக்கு புது வரவான தவெகவால் கள நிலவரம் மாறவும் வாய்ப்புள்ளது.
வீடியோ
மேலும் படிக்க: புதுச்சேரியில் 200 யூனிட் இலவச மின்சாரம்- ரூ.25000 உதவித்தொகை… தவெக தேர்தல் வாக்குறுதிகள்… விஜய் மாஸ் அறிவிப்பு!