கேரளம், அசாமில் வாக்குப்பதிவு தொடக்கம்.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..
Assembly Election: 140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மா.கம்யூ., தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. 3வது முறையாக ஆட்சியில் அமர மா. கம்யூ.,, மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.
அசாம், கேரள மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிற்கு கடந்த மாதம் 15ம் தேதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவற்றில் அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று (ஏப்.9) தேர்தல் நடக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த 3 மாநிலங்களிலும் மார்ச் 16ம் தேதி அன்று தொடங்கி மார்ச் 23 வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. மார்ச் 24ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், மார்ச் 26ம் தேதி அன்று வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகவும் இருந்தது. தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக இந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தலைவர்களின் அனல் பறந்த பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
அசாம், கேரளாவில் கடும் போட்டி:
126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜனதா கூட்டணியும், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் மல்லுக்கட்டுகின்றன. இங்கு மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.
இங்கு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் தனது பலத்தை காட்ட கோதாவில் உள்ளது. இங்கு பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 883 பேர் போட்டியிடுகின்றனர்.
7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்:
இந்த மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். இதற்காக தேர்தல் கமிஷன் விரிவான பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குப்பதிவுக்காக பல்லாயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமானதாகக் கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொது விடுமுறை, மதுக்கடை மூடல்:
பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, தேர்தல் நடைபெறும் இந்த மாநிலங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும் மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.