மதுரையில் ஜன.23-இல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்…தேஜ கூட்டணி தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்பு!
Madurai Mega Conference: மதுரையில் வரும் ஜனவரி 23- ஆம் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் அதிமுக- பாஜக கூட்டணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் மேலும் சில கட்சிகளை இணைக்க வேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவிடம் பாரதீய ஜனதா கட்சி சுமார் 56 சட்டமன்ற தொகுதிகளையும், 3 அமைச்சர் பதவிகளையும் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதே போல, அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 சட்டமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் சீட்டும் அதிமுக ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் தயார் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
எடப்பாடி – நயினார் சந்திப்பு
இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சென்னையில் அவரது இல்லத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசி இருந்தார். அப்போது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெற்றதாகவும், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை சென்னை அல்லது மதுரையில் எங்கு நடத்தலாம் என்று ஆலோசித்ததாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜனவரி மாதம் கடைசியில் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்…மத்திய உள்துறை அமைச்சகம்-தடயவியல் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
அதன்படி, ஜனவரி 23- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார். இதற்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தவும், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை இறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் தமிழகம் வர உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள்
இவர் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து பேச்சு வார்த்தை மேற்கொண்டு தொகுதி பங்கீட்டை இறுதி செல்வதற்கான பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும், பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மேடையில் பிரதமர் மோடி முன்பு உரையாற்ற வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளாராம். இதற்கான பணிகளை பாஜக தலைமை முடுக்கி விட்டுள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: 3 நாள்களில் பாமக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்…அருள் எம்எல்ஏ!