ராமதாஸ்-சசிகலா கூட்டணி உறுதியானது… தமிழகம்-புதுச்சேரியில் இணைந்து போட்டி!
PMK founder And Sasikala Alliance: பாட்டாளி மக்கள் கட்சியுடன், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி முடிவாகி உள்ளது. இந்தக் கூட்டணியானது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. கூட்டணிக்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ராமதாஸ்-சசிகலா கூட்டணி உறுதியானது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வீட்டில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா இன்று வெள்ளிக்கிழமை ( மார்ச் 20) திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த திடீர் சந்திப்பில், கூட்டணி தொடர்பாக இருவரும் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. சுமார் 1:45 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தற்போது, முடிவடைந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம்- புதுச்சேரியில் போட்டியிட முடிவு
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் இணைந்து போட்டியிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. கொள்கை அளவில் உறுதியாக இருக்கும் எந்த கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் சேர்த்துக் கொள்வோம். இதற்கான விருப்பத்தை என்னிடமும், சசிகலா அம்மையாரிடமும் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில், நாங்கள் இருவரும் கலந்து பேசி முடிவு எடுப்போம். தேர்தல் நேரங்களில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுத்து அறிவிப்பதற்கு இது போன்ற காலதாமதங்கள் ஏற்படுவது இயல்பாகும்.
மேலும் படிக்க: S.P. Velumani Tamil Nadu Election: தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவாரா எஸ்.பி.வேலுமணி!
ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஒப்பந்தம்
வெற்றிக் கூட்டணி அமைவதற்கே காலதாமதம்
அந்த வகையில், இப்படி ஒரு வெற்றிக் கூட்டணி அமைப்பதற்காகவே இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், வெற்றியையும் பதிவு செய்யும். இந்த கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டது சிலருக்கு நடுக்கத்தை உண்டாக்கி இருக்கும். முதல்வர் வேட்பாளராக மற்றவர்களை நிறுத்தி அவர்களுக்கு வாழ்த்து கூறுவேன் என்று தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கான நல்ல முடிவு
இதைத் தொடர்ந்து, அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எங்களது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழக மக்களுக்கான ஒரு நல்ல முடிவை நானும் மருத்துவர் ராமதாஸ் ஐயாவும் சேர்ந்து எடுத்துள்ளோம். அதன் அடிப்படையில், இருவரும் ஒன்றிணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி. கே. மணி, ராமதாஸின் மகள் ஸ்ரீ காந்திமதி ஆகியோர் பங்கேற்றனர். பாமகவின் சேலம் தொகுதி எம். எல். ஏ. அருள் சந்திப்பை புறக்கணித்துள்ளார்.
மேலும் படிக்க: மநீம செயற்குழு கூட்டம்… தனி சின்னம்-கூடுதல் தொகுதிகள் குறித்து ஆலோசனை?