நெருங்கும் தேர்தல்.. வரும் ஜூலை 27 தமிழகம் வரும் பிரதமர் மோடி..
PM Modi Visit To Tamil Nadu: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். குறிப்பாக இந்த பயணத்தின் போது அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கிறார் அதேபோல் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற இருக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தமிழகம் வருகை, ஜூலை 11, 2025: பிரதமர் நரேந்திர மோடி 2025 ஜூலை 27 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கக்கூடிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக ஜூலை 26 2025 அன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் பாஜக:
2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்த பொழுது இந்த கூட்டணியானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Also Read: 5 நாடுகள் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி




ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் முதலமைச்சர் வேட்பாளரும் அதிமுகவிலிருந்து தான் எனவும் பாஜக தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குகிறார்.
மாவட்டந்தோறும் பாஜக மாநாடு:
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் நான்கு இடத்தை பிடித்தது. இந்த முறை பாஜக தமிழகத்தில் பலமாக காலூன்ற வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக தரப்பில் பூத் ஏஜெண்டுகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களும் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. அதில் குறிப்பாக வருகின்ற ஆகஸ்ட் 17 2025 அன்று நெல்லையில் மாநாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து முதல்வருக்கு காய்ச்சல்.. நயினார் நாகேந்திரன் பேட்டி!
சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களில் மாநாடு நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 2025 செப்டம்பர் 13-ம் தேதி மதுரையிலும், 2025 அக்டோபர் 26ம் தேதி கோவையிலும், 2025 நவம்பர் 23-ஆம் தேதி சேலத்திலும், 2025 டிசம்பர் 21-ம் தேதி தஞ்சாவூரிலும், அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 4-ம் தேதி திருவண்ணாமலையிலும், 2026 ஜனவரி 24-ஆம் தேதி திருவள்ளூரிலும் மாநாடு நடைபெற இருக்கிறது.
பிரதமர் மோடியின் தமிழக பயணம்:
இது ஒரு பக்கம் இருக்க சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரதமர் மோடி வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஏழு முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடக்க இருக்கும் நிலையில் வருகின்ற ஜூலை 27 2025 அன்று தமிழகத்திற்கு வருகிறார்.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். குறிப்பாக இந்த பயணத்தின் போது அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கிறார் அதேபோல் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற இருக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக தரப்பில் நடத்தப்படும் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.