அ.தி.மு.க திராவிட கட்சி அல்ல, அந்தக்காலம் மலையேறி போச்சு: செல்வப்பெருந்தகை
Tamil Nadu Congress' 2026 Strategy: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியை முழுமையாக சீரமைத்து வருவதாகவும், அதிமுக திராவிடக் கட்சி அல்ல என்றும், பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை ஜூலை 10: அ.தி.மு.க Anna Dravida Munnetra kazhagam) ஒரு திராவிடக் கட்சி அல்ல என்றும், அது பா.ஜ.க (Bharathi Janatha Party) மற்றும் ஆர்.எஸ்.எஸ். எழுதி கொடுப்பதை வாசிக்கும் ‘சங்கிகளின் கட்சி’யாக மாறிவிட்டது என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை (Tamil Nadu Congress Committee President Selvaperundhagai) கடுமையாக விமர்சித்துள்ளார். தி.மு.க.வுடனான கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்பது குறித்துக் காங்கிரஸ் தேசியத் தலைமை முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். “2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி முழுமையாக சீரமைக்கப்பட்டு இயக்கத் தளத்தில் வலுப்படுத்தப்படுகிறது. இதற்காக பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 100 கிராமக் கமிட்டி முதன்மைப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் சீரமைப்புப் பணிகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கச் சீரமைப்பு குறித்த மாவட்ட அளவிலான முதன்மைப் பயிற்சியாளர்கள் அறிமுகக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு, செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கட்சிச் சீரமைப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக காங்கிரஸ் இயக்கத்தைச் சீரமைக்க, பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 100 கிராம கமிட்டி முதன்மைப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 12,525 பஞ்சாயத்துகளில் உள்ள நிர்வாகிகளுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.




கிராம கமிட்டி: கிராம கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் 72% நிறைவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் முழுமை பெறும். அனைத்து மாவட்டங்களிலும் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு நவீன அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முழுமையாகச் செய்து வருகிறோம்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை: 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் அதிக சீட்டு கேட்போம் எனவும், அமைச்சரவையிலும் பங்கு கேட்போம் எனவும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உள்ளது. கூடுதல் தொகுதிகள் கேட்பது, பெறுவது உள்ளிட்டவற்றை தேசியத் தலைமை முடிவு செய்யும்.
தேசியத் தலைமை ஒப்புதல் இல்லாமல் நான் எதுவும் பேச முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதை மேற்கோள் காட்டித்தான் தேசியத் தலைமை தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசும்.
வாக்கு சதவீதம்: ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட 25,000 வாக்குகள் கூடுதலாகப் பெறும். அந்த அளவிற்கு நாங்கள் சிஸ்டமேட்டிக்காகச் செயல்பட்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் மனசாட்சியாக நான் செயல்படுவேன்.
Also Read: ‘என் பெயரை பயன்படுத்தக் கூடாது’ அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை.. உச்சகட்ட மோதல்!
அ.தி.மு.க. மீதான விமர்சனங்கள் மற்றும் பிற கருத்துகள்
அ.தி.மு.க. விமர்சனம்: “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயே கோயில் நிதியிலிருந்து கல்வி நிறுவனங்கள் கட்டினார்கள். அதனை தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் சேகர் பாபு செய்து வருகிறார். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எழுதி கொடுத்து எடப்பாடி பழனிசாமி வாசிக்கிறார். அ.தி.மு.க. திராவிடக் கட்சி அல்ல. அந்தக் காலம் மலையேறிப் போச்சு. அ.தி.மு.க. ‘சங்கிகள் கட்சி’ ஆகிவிட்டது.” என்றும், “ஜெயலலிதா அவர்களைப் பழித்துப் பேசியவர்களுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது” என்றும் அவர் விமர்சித்தார்.
விஜய் குறித்த கருத்து: “கடந்த 4 ஆண்டுகால காவலில் மரணமடைந்தவர்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்திப்பதாகக் கூறுவதைப் பார்த்தால் அவர் அரசியல் செய்வதாகத் தெரிகிறது. அவரின் அரசியல் வேறு, எங்கள் அரசியல் வேறு.”
புதியவர்களுக்கு வாய்ப்பு: வரும் சட்டமன்றத் தேர்தலில் புதியவர்களுக்கு நிச்சயமாக வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
தமிழிசை குறித்த கருத்து: “தமிழிசை பேசுவதில் அர்த்தம் இருக்கிறதா? நானே பெருந்தன்மையுடன் விட்டுவிட்டேன் எனத் தமிழிசை பொய் பேசுகிறார். பொய் பேசுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது. என் தொகுதிக்கு வந்த அவரை, எந்தக் குறையும் இல்லாமல் அனுப்பி வைத்தோம். குறை எனக்குத்தான்.”
காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்ற குடியாத்தத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவும், 2025 ஜூலை 13 ஆம் தேதி சென்னையில் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழாவும் நடைபெற உள்ளதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.