Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் விஜயுடன் சந்திப்பு: ஜாக்டோ-ஜியோ மறுப்பு – பரபரப்பு அறிக்கை!

JACTTO-GEO: தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சந்தித்ததாக வெளியான தகவலை அந்த அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. உண்மையில், ஆசிரியர் தலைவர் மாயவன் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், அமைப்புக்கு அதில் தொடர்பில்லை என்றும் தெரிவித்தனர். இயக்க நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.

நடிகர் விஜயுடன் சந்திப்பு: ஜாக்டோ-ஜியோ மறுப்பு – பரபரப்பு அறிக்கை!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஜாக்டோ-ஜியோ நிர்வாகி மாயவன்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 15 Jun 2025 17:39 PM

தமிழ்நாடு ஜூன் 15: தமிழக வெற்றி கழக (Tamilaga Vetri Kazhagam) தலைவர் விஜயை (Leader Vijay) ஜாக்டோ-ஜியோ (Jacto-Gio)  நிர்வாகிகள் சந்தித்ததாக வெளியான செய்தி அரசியல், அரசு ஊழியர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பு அதிரடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டு, அது பொய்யானது என தெரிவித்துள்ளது. உண்மையில், மாயவன் (Mayavan) என்ற ஆசிரியர் தலைவர் தனிப்பட்ட முறையில் விஜயை சந்தித்ததாக தெரிவித்தனர். இதை ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நடந்த சந்திப்பு என்று கூறுவது தவறு என அவர்கள் சுட்டிக்காட்டினர். பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு சார்பில் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சந்திப்பு குறித்த தகவல் மற்றும் கோரிக்கைகள்

கடந்த 2025 ஜூன் 13ஆம் தேதி நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்த பிறகு, பரந்தூர் போராட்டக் குழுவினர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்ததாகச் செய்திகள் வெளியாகின. அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை என்றும், ஓய்வூதியர்களுக்குப் பணப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு விஜய் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் பரவின.

ஜாக்டோ-ஜியோவின் அதிகாரப்பூர்வ மறுப்பு

இந்தத் தகவல்களை ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். “கடந்த 13.06.2025 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் திரு.விஜய் அவர்களை சந்தித்ததாக வெளியான ஊடகச் செய்திக்கு ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மறுப்புத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், அதற்கும் ஜாக்டோ-ஜியோவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யார் உண்மையில் சந்தித்தார்?

ஜாக்டோ-ஜியோவின் அறிக்கையின்படி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு.மாயவன் என்பவர் தனிப்பட்ட முறையில் திரு.விஜயைச் சந்தித்து, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாகப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பாக நடந்ததாக வெளியான செய்தி தவறானது என்பதை ஜாக்டோ-ஜியோ சுட்டிக்காட்டியுள்ளது.

ஜாக்டோ-ஜியோ மறுப்பு

ஜாக்டோ-ஜியோவின் தற்போதைய நிலைப்பாடு

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பாகும். பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளுடன் தொடர்ந்து போராடி வருவதாகவும், பேச்சுவார்த்தைகள் மற்றும் போராட்டங்களின் விளைவாக ஏற்கனவே சரண்டர், மகப்பேறு விடுப்புப் பணிவரன்முறை உள்ளிட்ட 9 கோரிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை 30.09.2025க்குள் பெறப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதால், இயக்க நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.