பாஜக கூட்டணியில் பாமக-தேமுதிக…நயினார் நாகேந்திரன் அடித்த டிவிஸ்ட்!
Nainar Nagendran : தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைவது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் கிடைக்கப்பெறும் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தேஜ கூட்டணியில் பாமக- தேமுதிக
அதிமுக, பாஜக கூட்டணியல் பாமக மற்றும் தேமுதிக இணைவது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் தெரியும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல நடைபெற்றிருந்தது. தமிழகத்தில் தற்போது வரை எந்த கட்சிகளும் நடத்திடாத வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். தேசிய ஜனநாயக கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமக ஆகிய கட்சிகள் இணைவது குறித்து ஒரு வாரத்தில் பதில் கிடைக்கும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பொய்யான வாக்குறுதிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு ரத்து என்பன உள்ளிட்ட பொய் வாக்குறுதி
இதில், நீட் தேர்வு ரத்து, சொத்துவரி உயர்த்தப்படாது என்று கூறிய திமுக அரசு 3 மடங்கு சொத்து வரியை உயர்த்தியது. இதேபோல, மின்சார கட்டணமும் கடுமையாக உயர்த்தியது. மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 கொடுத்தாலும் மக்களுக்கு பெரிய அளவிலான சுமை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகள் பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் கொடுக்காத போது, இந்த ஆண்டு மட்டும் பொங்கல் பரிசு வழங்கியது எதற்காக. தேர்தல் தோல்வி பயத்தினாலேயே பொங்கல் பரிசு ரொக்க பணம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரை-திருநெல்வேலி வழியாக ஜன.28- இல் அம்ரித் பாரத் ரயில் சேவை…தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பொய்த்துபோன பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பு
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று திமுக தலைவர் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டு காலமாக அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்தி விட்டு, வருகிற ஜூன் மாதம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சியிடம் அதிமுக அடிமையாக இருக்கிறது என்று கூறுவதில் அர்த்தமில்லை. அப்படி அடிமையாக இருந்திருந்தால், கடந்த மக்களவைத் தேர்தலின் போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தான் திமுக அடிமையாக சேர்த்து வைத்துள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு அழுத்தம் எதனால்
பிரதமர் நரேந்திர மோடி எந்த நாடுகளுக்கு சென்றாலும், அங்கு தமிழை பற்றி பேசி வருகிறார். திருக்குறளை 23 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து அறிவித்துள்ளார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட அமைப்புகளுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்பு கிடையாது. இதில், ஏதேனும் குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் தான் கேட்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அழுத்தம் இருப்பதாக கூறியது எதன் அடிப்படையில் கூறினார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பள்ளி-கல்லூரிகளுக்கு ஜன.28- ஆம் தேதி விடுமுறை…வெளியான அறிவிப்பு…மாணவர்கள் குஷி!