தஞ்சையில் நடக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாடு.. சிறப்பு ஏற்பாடுகள் என்ன?
DMK Women Wing Conference: தஞ்சையில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதில் சுமார் ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறுகிறது.
தஞ்சை, ஜனவரி 26, 2026: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டு அருகே “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற தலைப்பில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு, ஜனவரி 26ஆம் தேதியான இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களும், தேர்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் திமுக:
திமுகவைப் பொறுத்தவரையில், முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அதேபோல், ஒவ்வொரு அணித்தரப்பிலும்—உதாரணத்திற்கு, இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் தரப்பிலும்—பிரம்மாண்டமான முறையில் தொடர்ச்சியாக மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் தஞ்சையில் டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடத்தப்பட உள்ளது.
தஞ்சையில் நடக்கும் மகளிர் அணி மாநாடு:
தஞ்சையில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதில் சுமார் ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வருகை – பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்:
திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து தஞ்சைக்கு புறப்பட்டுச் செல்கிறார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி தஞ்சாவூரில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அந்த பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட ஏற்பாடுகள்:
இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விழா பந்தல் உள்ளிட்டவை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஒன்றரை லட்சம் பெண்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், 400 மொபைல் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்பதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தரும் போது 50 பெண்கள் புல்லெட் வாகனங்களிலும், 200 பெண்கள் ஸ்கூட்டிகளில் அணிவகுத்து சென்று முதல்வர் ஸ்டாலினை வரவேற்க உள்ளனர்.