“அழுத்தம் இருக்கிறது.. அழுத்தத்திற்கு அடங்கிப் போகமாட்டேன்”.. விஜய் பரபர பேச்சு
TVK leader vijay speech at mamallapuram: நம்முடைய அரசியல் பயணத்தில் மிக முக்கிய காலத்தில் நாம் இருக்கிறோம். அழுத்தம் இருக்கிறது, ஆனால் அந்த அழுத்தம் நமக்கு இல்லை. மக்களுக்கு இருக்கிறது. இந்த அழுத்தத்திற்கெல்லாம் அடங்கி போகமாட்டேன் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னை, ஜனவரி 25: தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கழக செயலர்கள் கூட்டம் இன்று சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜய், நம்முடைய அரசியல் பயணத்தில் மிக முக்கிய காலத்தில் நாம் இருக்கிறோம். நமக்கு ஏதாவது அழுத்தம் இருக்குமோ என்று நினைக்கிறீர்களா? அழுத்தமா? நமக்கா? அதெல்லாம் இல்லை. இந்த மாதிரி அழுத்தங்களுக்கு எல்லாம் அடங்கிப் போகிற ஆளா நான்? என்று நிர்வாகிகளை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மக்களுக்கு அழுத்தம் இருக்கிறது:
தொடர்ந்து, பேசிய அவர், அழுத்தம் இருக்கிறதா? என்று கேட்டால், அழுத்தம் இருக்கிறது. ஆனால், அந்த அழுத்தம் நமக்கு இல்லை. மக்களுக்கு இருக்கிறது. மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் அழுத்தத்தில் இருக்கின்றனர். தவெகவை மக்கள் நம்புகின்றனர். தயவு செய்து தவெகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும், யாருக்காகவும் எதற்காகவும் அரசியலில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அடிமையாக இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை. விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார். இவருடன் யார் வரப்போகிறார்கள் என்று நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். 30 வருடங்களாக நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், மக்கள் நம்மை சிரியாக மதிப்பிடுகிறார்கள்.
ஊழல் செய்ய மாட்டேன்:
🔥🔥🔥🔥
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_NewsTrichy) January 25, 2026
அரசியலுக்கு வந்ததுக்கு பின்னும் சரி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததுக்கு பிறகும் சரி ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசாவையும் தொட மாட்டேன். எனக்கு அதைத் தொட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு துளி ஊழல் கூட படிய விட மாட்டேன் என்றும் உறுதியளித்தார். அதோடு, பாஜகவிடம் அதிமுக நேரடியாகவே சரண்டைந்துவிட்டதாகவும், திமுகவை தீய சக்தி என்றும், அதிமுகவை ஊழல் சக்தி எனவும் விமர்சித்துள்ளார்.
மக்களுக்கு என் மீது மட்டும் நம்பிக்கை இருந்தால் பத்தாது, என்னுடன் பயணிக்கும் அனைவரின் மீதும் அந்த நம்பிக்கை வர வேண்டும். அந்த நம்பிக்கை இல்லையென்று நான் கூறவில்லை. ஆனால், அது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் தான் இருக்கிறது, நிர்வாகிகள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தனித்து நின்று ஜெயிப்போம்:
நட்பு சக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனியாக நின்று ஜெயிப்போம் என்று அவர் கூறினார். ஆளுங்கட்சிக்கு மற்றும் ஆண்ட கட்சிக்கு பூத் என்றால் என்ன தெரியுமா? கள்ள ஓட்டு போடும் இடம். நடைபெறவுள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர்; இந்த ஜனநாயகப் போரில் முன்னணியில் நிற்கக் கூடிய நீங்கள்தான் தளபதிகள். முழித்துக் கொண்டிருக்கும் போதே முழியை தோண்டி எடுத்துச் செல்லக்கூடியது இந்த தீய சக்தி என்று அவர் கூறியுள்ளார்.