திமுகவிடம் 20 தொகுதிகள் குறி வைக்கும் மார்க்சிஸ்ட்…பட்டியலையும் தயார் செய்தது!
Marxist Communist Party: திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 20 சட்டமன்ற தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான பட்டியலை தயார் செய்து திமுக தலைமையிடம் அளித்து வலியுறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

திமுகவிடம் 20 தொகுதிகள் குறி வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் மத்தியில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரக்கூடிய கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு நிர்பந்தம் செய்து வருகின்றன. ஆனால், திமுக தலைமை அதற்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே கூடுதல் தொகுதிகள் கேட்டு திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, தற்போது சுமார் 20 தொகுதிகளுக்கான பட்டியலை தேர்வு செய்துள்ளதாம். இந்த பட்டியலை திமுக தலைமையிடம் அளித்து தங்களது கட்சிக்கான தொகுதிகளை ஒதுக்க கோரி வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், சென்னையில் ஒரு சட்டமன்ற தொகுதியை கேட்டு பெற வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக தலைமைக்கு தலைவலியாக அமைந்தது
இது திமுக தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவானது முதல்வர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சிக்கு 40 சட்டமன்ற தொகுதிகள் வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனிடையே, தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து மாணிக்கம் தாகூர் எம்பி பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சருடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? தகுந்த நேரத்தில் அறிவிப்பு வரும் – பிரேமலதா விஜயகாந்த் சூசகம்..
திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்கும் கட்சிகள்
அண்மையில் தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று கடிவாளம் இட்டுள்ளார். இதனிடையே, மக்கள் நீதி மய்யமும் கூடுதல் தொகுதிகள் கேட்க வேண்டும் என்றும், அதற்கான தொகுதிகள் பட்டியலையும் தயார் செய்து அண்மையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இவ்வாறாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு வலியுறுத்தி வருகின்றன.
தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட வாய்ப்பு
இதே போல, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு கோரிக்கை வைத்து வருகின்றன. இதனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில் அந்த கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறி வேறு கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க: மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாட்சி.. அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.. சட்டப்பேரவையில் முழங்கிய முதல்வர்!