mano thangaraj Tamil Nadu Election: அடுத்தடுத்து வெற்றி… பத்மநாபபுரம் தொகுதியில் முத்திரை பதிப்பாரா டி.மனோ தங்கராஜ்!
Tamil Nadu Elections 2026 : திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இரு முறையும் வெற்றி பெற்று அமைச்சர் பொறுப்பில் இருந்து வந்த டி. மனோ தங்கராஜ் மீண்டும் பத்மநாபபுரம் தொகுதியில் முத்திரை பதிப்பாரா.

பத்பநாபபுரம் தொகுதியில் முத்திரை பதிப்பாரா மனோ தங்கராஜ்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்எல்ஏவாக இருந்து வருபவர் டி. மனோ தங்கராஜ். இவர், கடந்த 1967- ஆம் ஆண்டு ஜூன் 1- ஆம் தேதி தங்கராஜ் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவர், கல்லூரி காலங்களில் இருந்தே அரசியலில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். அப்போது, மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராக பதவி வகித்துள்ளார். இதை தொடர்ந்து, திமுகவில் இணைந்த மனோ தங்கராஜ் கடந்த 1996- ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியுள்ளார். அப்படியாக கட்சியில் மெல்ல மெல்ல வளர்ந்து வந்த டி. மனோ தங்கராஜ், கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் களம் இறக்கப்பட்டார். அவர் களம் கண்ட முதல் தேர்தலிலேயே தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.
அமைச்சர் பதவி வழங்கப்பட்டு விடுவிப்பு
இதைத் தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட மனோ தங்கராஜ் 2- ஆவது முறையாக தனது வெற்றியை பதிவு செய்தார். அப்போது, அவருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவி பொறுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2023- ஆம் ஆண்டு அவரது இலாகா மாற்றப்பட்டு பால் வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் கடந்த 2024- ஆம் ஆண்டு அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மேலும் படிக்க: இனி வாக்காளர் தகவல் சீட்டுதான்… பூத் சிலிப் கிடையாது… என்ன காரணம்!
இரு தேர்தல்களில் போட்டியிட்ட மனோ தங்கராஜ்
திமுகவில் இணைந்த மனோ தங்கராஜ் கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியதுடன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை வீழ்த்தி 76 ஆயிரத்து 249 (47.2 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்திருந்தார். இதே போல, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டி. மனோ தங்கராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை வீழ்த்தி 87,734 ( 51.57 சதவீதம்) வாக்குகள் பெற்று தனது எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
கள நிலவரம் மாற்றி அமைய வாய்ப்பு
இதனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் மீண்டும் மனோ தங்கராஜ் களம் இறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர் போட்டியிடும் பட்சத்தில் மீண்டும் எம்எல்ஏ பதவியை அடைவார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. எதிர்க் கட்சி வேட்பாளரை பொறுத்து கள நிலவரம் மாற்றி அமையலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருவண்ணாமலையில் 53 வெண்கல சுவாமி சிலைகள் கடத்தலா? தேர்தல் பறக்கும் படை விசாரணை!