தவெக வசம் செல்கிறதா கொங்கு மண்டலம்? செங்கோட்டையனின் ஸ்கெட்ச்!
Kongu Region Possibility Will Go Tvk: கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பதும், இந்த கோட்டை வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு யார் வசம் செல்லும் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலம் முதல் தற்போது வரை மிகப் பெரிய வரலாற்று தலைவராக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் இருந்து வருகிறார். 25 வயதில் எம்எல்ஏவான இவர், அதிமுகவில் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் விளங்கி வந்தார். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. அது முதல் தற்போது வரை அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும், சச்சரவுகளும் நீடித்து வருகின்றன.
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையன்
இதில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் போர்க் கொடியை உயர்த்தினார். ஆனால், இதற்கு சற்றும் செவி சாய்க்காத எடப்பாடி கே. பழனிசாமி அவரது அடிப்படை பொறுப்பு உள்ளிட்டவற்றை பறித்து கட்சியில் இருந்து நீக்கினார்.
மேலும் படிக்க: விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டம்…செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!




கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை
இதைத் தொடர்ந்து, அமைதியாக இருந்து வந்த செங்கோட்டையன் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு, தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியிலும் விஜய்யின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருவதாக பொதுமக்கள் தான் தெரிவிக்கின்றனர். ஆனால் நாங்கள் யாரும் அப்படி தெரிவிக்கவில்லை. விரைவில் கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்று தெரியவரும் என்று தெரிவித்தார்.
கொங்கு மண்டலம் குறித்து அரசியல் உலகுக்கு…
அதாவது, கொங்கு மண்டலம் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டையாக மாறும் என்பதே அவர் கூறிய வார்த்தையின் சூசகமாக தெரிய வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் வரும் டிசம்பர் 16- ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளும் பரப்புரையில் கூடும் கூட்டத்தின் அடிப்படையில் கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்று அரசியல் உலகுக்கு செங்கோட்டையன் தெரிய வைப்பார் என்று பரவலாக பேசப்படுகிறது.
கொங்கு மண்டலத்தின் முக்கிய புள்ளி
மேலும், ஈரோடு மாவட்டத்தில் தகர்க்க முடியாத, தவிர்க்க முடியாத மாபெரும் அரசியல் புள்ளியாக தற்போது வரை விளங்கி வரும் செங்கோட்டையன் எந்த கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டாலும் கொங்கு மண்டலம் அவரது கோட்டையாகவே நீடிக்கும் என்று பொதுவாக பேசப்படுகிறது. தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
கொங்கு மண்டலம் யார் வசம் செல்லும்
இதில், கொங்கு மண்டலம் செங்கோட்டையன் வசம் செல்லுமா அல்லது அதிமுகவின் வசம் செல்லுமா என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளும், இந்த தேர்தலில் வாக்களிக்கும் கொங்கு மண்டல பொதுமக்களுமே முடிவு செய்வார்கள். அந்த முடிவுகளை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கொங்கு மண்டலத்தை தக்க வைப்பதற்காக செங்கோட்டையன் மிகப்பெரிய ஸ்கெட்ச் போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் சினிமா டயலாக் பேசுவதை நிறுத்த வேண்டும்…வைகோ!