தவெக-வின் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட ‘மாஸ்டர் மைண்ட்’ ஜான் ஆரோக்கியசாமி யார்?
John Arockiasamy: தவெக-வின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டு தமிழகத்தில் கல்வி பயின்ற ஒரு சிறந்த மேலாண்மை நிபுணர் ஆவார். சிவசேனா மற்றும் பாமக போன்ற கட்சிகளுக்கு வெற்றிகரமான பிரச்சார உத்திகளை வகுத்துக் கொடுத்த இவர், அரசியல் களத்தில் நீண்ட அனுபவம் பெற்றவர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தையே அதிரவைத்துள்ளன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்போதைய நிலவரப்படி 110 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை நோக்கி நகர்கிறது. மை ஆக்சிஸ் இந்தியாவின் கணிப்பு நிஜமாகும் சூழலில், இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமி யார் என்பது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, தவெக-வை ஆட்சிக் கட்டிலை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார். கருத்துக்கணிப்புகளைத் தாண்டி தவெக படைத்துள்ள இந்த சாதனைக்கு இவரது கூர்மையான அரசியல் பார்வையும் திட்டமிடலுமே காரணம்.
கல்வி மற்றும் ஆரம்பகாலப் பயணம்
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜான் ஆரோக்கியசாமி, தமிழகத்துடனான நெருங்கிய தொடர்பைக் கொண்டவர். திருச்சியில் உள்ள புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரியில் (St. Joseph’s College) ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து, சென்னை லயோலா கல்லூரியில் மேலாண்மைப் படிப்பை முடித்த இவர், கார்ப்பரேட் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். ‘Perfect Relations’ மற்றும் ‘Good Relations India’ போன்ற முன்னணி நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணியாற்றி, தகவல் தொடர்பு மற்றும் மேலாண்மையில் 16 ஆண்டுகால அனுபவத்தைப் பெற்றார்.
அரசியல் வியூகங்களில் தடம் பதித்த விதம்
2017-ல் சொந்தமாக ஆலோசனைக் நிறுவனத்தைத் தொடங்கிய இவர், பின்னர் ‘JPAC Persona’ மூலம் முழுநேர தேர்தல் வியூக வகுப்பாளராக உருவெடுத்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவுக்காகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. கர்நாடகாவில் சித்தராமையாவின் ஆலோசனைக் குழுவிலும் முக்கியப் பங்கு வகித்தார். தமிழக அரசியலைப் பொறுத்தவரை, 2016 தேர்தலில் பாமக-வின் “மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி” என்ற புகழ்பெற்ற முழக்கத்தை உருவாக்கி, அன்புமணி ராமதாஸை ஒரு நவீனத் தலைவராக முன்னிறுத்தியவர் இவரே.
Also Read: Tamil Nadu Election 2026 Results LIVE: தொடர்ந்து முன்னேறும் தவெக.. விஜய் அவசர ஆலோசனை!
தவெக-வின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்ட வியூகம்
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வியூக வகுப்பாளராகப் பொறுப்பேற்ற ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் கொள்கைகளையும் தலைவரின் பிம்பத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் புதிய உத்திகளைக் கையாண்டார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களுக்கு இடையே, “மாற்றத்துக்கான புரட்சி” என்ற உணர்வை இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்களிடம் விதைத்ததில் இவரது பங்கு அளப்பரியது. இன்று தவெக பெற்றுள்ள இந்த முன்னிலை, இவரது திட்டமிடலுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.