அதிமுக கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் தமாகாவுக்கு உடன்பாடு… ஜி. கே. வாசன் அறிவிப்பு!
Tamil Maanila Congress Party: தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்பட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார். இதனால், தேஜ கூட்டணியில் தமாகா கூட்டணி உறுதியாகி உள்ளது.

தேஜ கூட்டணியில் தமாகா கட்சிக்கு உடன்பாடு
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 சட்டமன்ற தொகுதிகள், பாமகவுக்கு ( அன்புமணி தரப்பு) 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 6 தொகுதியில் வரை எதிர்ப்பார்த்து இருந்த நிலையில், 3 முதல் 4 தொகுதிகள் வரை அதிமுக தலைமை ஒதுக்க முன் வந்ததாக கூறப்படுகிறது. இதில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசனுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதனால், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை கூட்டத்தில் ஜி.கே. வாசன் பங்கேற்கவில்லை. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஜி. கே. வாசனுக்கு அதிருப்தி இருந்ததாக கூறப்பட்டது.
தேஜ கூட்டணி தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் உடன்பாடு இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தேன்.
மேலும் படிக்க: நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு குறி.. அதிமுக-அமமுக இடையே கடும் போட்டி.. யார் வசம் செல்கிறது!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்
வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் சந்திப்பின் மூலம் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு, நான் சென்னையில், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களை சந்தித்தேன்.
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் @AIADMKOfficial மற்றும் #தேசியஜனநாயகக்கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் #தமாகா(மூ) எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
— G.K.Vasan (@GK__Vasan) March 24, 2026
அதிருப்தியில் இருந்தாரா தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், இதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அதிருப்தியில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்வதாகவும், அந்த கூட்டணி தலைமை ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையில் உடன்பாடு இருப்பதாகவும் ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் தடுத்து நிறுத்தம்.. தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை.. முழு விவரம் என்ன!