எடப்பாடி பழனிசாமியின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி…என்ன அது!
Edappadi k Palaniswami: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக் கட்டு போட்டியில் பங்கேற்று எதிர்பாரதவிதமாக மரணம் அடையும் மாடுபிடி வீரருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு சார்பில் இன்ஸ்சூரன்ஸ் வழங்கப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார்.

எடப்பாடியின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, சாலப்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 27) நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது, அந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் மாடுபடி வீரர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இதே போல, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் பதிவு செய்யப்பட்ட மாடு பிடி வீரர்களுக்கு அரசு சார்பில் இன்சூரன்ஸ் வழங்கப்படும். மேலும், காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், காளைகளுக்கும் அரசு சார்பில் இன்சூரன்ஸ் செய்து தரப்படும் என்று கூறினார்.
எடப்பாடியின் சூப்பர் தேர்தல் வாக்குறுதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். இதில், தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படுவது அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரும் எனவும், பெண்களைப் போல ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும், கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
மேலும் படிக்க: அன்புமணியின் அடுத்தக்கட்ட நகர்வு…பாமகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்!
வாக்காளர்களை கவர்வதற்கான அறிவிப்புகள்
வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்காக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிவிப்புகளை தயார் செய்து வருகின்றன. அதே போல, சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் இந்த மாதிரியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமியின் எந்த தேர்தல் வாக்குறுதிக்கு திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர்.
திமுகவின் அறிவிப்புகளை காப்பி அடித்த அதிமுக
இதில், திமுக அரசின் அறிவிப்புகளை அப்படியே அதிமுக காப்பி அடித்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு உலகப் புகழ்பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றிருந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி சிறப்பிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் பெண்கள் சுதந்திரத்துக்கு உரிய கட்டமைப்பு வழங்கப்படும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!