அன்புமணியின் அடுத்தக்கட்ட நகர்வு…பாமகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்!
Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் மாவட்டம் வாரியாக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேர்காணல் நடத்தி வருகிறார். இந்த நேர்காணலானது வருகிற ஜனவரி 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து எதிர்கொள்ள உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி உள்ளது. அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் நபர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. தற்போது, வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர். அதன்படி, அவர்களிடம் சென்னை, பனையூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 27) நேர்காணல் நடத்தினார். இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருச்சி, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த நபர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதியம் ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த விருப்ப மனு அளித்த நபர்களிடம் அன்புமணி ராமதாஸ் நேர்காணல் நடத்தினார்.
அரியலூர், கடலூர், தஞ்சாவூரை சேர்ந்தவர்களிடம்…
இதை தொடர்ந்து, நாளை புதன்கிழமை ( ஜனவரி 28) காலை அரியலூர், கடலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விருப்ப மனு அளித்த நபர்களிடமும், மாலையில் திருப்பத்தூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விருப்ப மனு அளித்த நபர்களிடமும் அன்புமணி ராமதாஸ் நேர்காணல் நடத்த உள்ளார். இந்த நேர்காணலானது வருகிற ஜனவரி 30 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன்?டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு…பின்னணி என்ன!




ராமதாஸ்-அன்புமணி இடையே மூளும் பனிப்போர்
பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது தந்தை ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக இருவரும் தனித்தனி அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸை இணைத்ததற்கு, ராமதாஸ் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார். மேலும், அவர் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டேன் என்றும் ராமதாஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதே போல, ராமதாசை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க வேண்டாம் என்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாக தெரிகிறது.
பாமக சார்பில் விரைவில் வேட்பாளர் பட்டியல்
இதனால், கூட்டணி விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது முடிவை அறிவிக்காமல் உள்ளார். இந்த நிலையில், அன்புமணி தரப்பு பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததுடன், விருப்ப மனுக்களை பெற்றதுடன், நேர்காணலையும் நடத்தி வருகிறது. நேர்காணல் முடிவடைந்ததை அடுத்து, பாமக வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே உள் கட்சி பூசல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் பெண்கள் சுதந்திரத்துக்கு உரிய கட்டமைப்பு வழங்கப்படும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!