அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன்?டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு…பின்னணி என்ன!
Ayyappan MLA: ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான அய்யப்பன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்திருந்தார். இதனால், அவர் அமமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டிடிவி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால், அந்த கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ஓரங்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இவருக்கு ஆதரவாக, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், குன்னம் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், ஐயப்பன் ஆகியோர் இருந்து வந்தனர். ஆனால், திடீரென ஓ. பன்னீர்செல்வத்தை தவிர்த்து விட்டு, மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களை போல, குன்னம் ராமச்சந்திரனும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால், குடும்ப சூழ்நிலை மற்றும் உடல் நிலை காரணமாக தான் திமுகவில் இணையவில்லை என்றும், ஒட்டுமொத்தமாக அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாகவும் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
ஓபிஎஸ் அணியில இருந்து வெளியேறும் அய்யப்பன்
இந்த நிலையில், ஓபிஎஸ் அணியில் உள்ள வெல்லமண்டி நடராஜன் மற்றும் அய்யப்பன் ஆகியோர் அந்த அணியில் இருந்து வெளியேற உள்ளதாகவும், திமுகவில் இணைய உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதற்கு, வெல்லமண்டி நடராஜன் தான் எந்தக் கட்சியிலும் இணையவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், எம்எல்ஏ அய்யப்பன் அந்த அணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இந்த நிலையில், மதுரை கோச்சடையில் உள்ள ஒரு விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தங்கி இருந்தார்.
மேலும் படிக்க: பெரம்பலூரில் ரெளடி மீது என்கவுண்டர் ஏன்? மத்திய மண்டல ஐ.ஜி. பரபரப்பு விளக்கம்!




டிடிவி தினகரனுடன் அய்யப்பன் திடீர் சந்திப்பு
அவரை முன்னால் எம்எல்ஏ அய்யப்பன் திடீரென இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 27) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதனால், அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அய்யப்பனின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தை பேசும் பொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
சந்திப்பு குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
அப்போது, அவர் கூறுகையில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான அய்யப்பன் என்னை சந்தித்தது உண்மை தான். அவர் என்னை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. நட்பு ரீதியாகவே சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, நாங்கள் அரசியல் பேசவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர். மீண்டும் என்னை சந்திப்பதாக அவர் கூறி சென்றார். ஓ. பன்னீர் செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, 3 முறை முதலமைச்சர் ஆக இருந்த ஓ. பன்னீர்செல்வம் எப்படி திமுகவில் இணைவார் என்று கூறினார்.
மேலும் படிக்க: “அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம்”.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!