தேமுதிக-அதிமுக கூட்டணி உறுதியாகிறது…விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…சீனிவாசன் கொடுத்த அப்டே்!
Dindigul Srinivasan: தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். மேலும், திமுக, தவெகவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

தேமுதிக-அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு
திண்டுக்கல்லில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் முன்னிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நபர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 27 ) நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து, சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் வருவதால் முதல்வர் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். கடந்த 4.5 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. பெண்களுக்கு மாத உதவி தொகை அளித்துவிட்டு, மதுபானம் மற்றும் மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி உள்ளது. இதேபோல, அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. சராசரி குடும்பத்தின் செலவு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
திமுக ஆட்சியில் 3 மடங்கு விலைவாசி உயர்வு
மகளிருக்கு ரூ.1000 அறிவித்துவிட்டு 3 மடங்கு விலைவாசியை திமுக அரசு உயர்த்தி உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. பாரதீய ஜனதா கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணி வைத்திருந்தைபோல, தற்போது அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதில், முன்பு இருந்த டிடிவி தினகரன், தற்போது மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளார். அதிமுக கூட்டணி குறித்த பொய்யான தகவலை திமுக பரப்பி வருகிறது. அதிமுக அறிவித்துள்ள 5 புதிய திட்டங்களால் வாக்கு வங்கி உயர்ந்துள்ளதுடன், மக்களிடம் வரவேற்பும் உள்ளது.
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமியின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி…என்ன அது!
திமுகவுக்கு பல வழிகளில் இருந்து பணம் வருகிறது
ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவுக்கு பல்வேறு வழிகளில் இருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு அளிக்காமல், ஊழியர்களிடம் இருந்து 10 சதவீத தொகையை பிடித்தம் செய்து, அதை ஓய்வூதியமாக அளிப்பதாக ஏமாற்றியுள்ளது. தமிழகத்தில் கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்தால், அவர்களை விடுவிக்க கோரி அமைச்சர் கூறுகிறார். இந்த விவகாரத்தில், அனைவருக்கும் பங்கு செல்வதால் இது பற்றி யாரும் பெரிதளவில் கண்டுகொள்ளவில்லை. காவல்துறையை சேர்ந்த சிலரே கஞ்சா விற்பதாகவும் கூறப்படுகிறது.
தேமுதிக-அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு
அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என சான்றிதழ் பெறப்பட்டது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் கூட பாதுகாப்பு இல்லை. தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். லாட்டரி வியாபாரி மாட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்பதாக விஜய் பேசி வருகிறார் என்று கூறினார்.
மேலும் படிக்க: தவெகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையா? விஜய்யை திடீரென புகழ்ந்து பேசிய அருள் எம்எல்ஏ..என்ன காரணம்!