ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களால் உதயமான 9 கட்சிகள்… யார் தொடங்கினார்கள்.. முழு விவரம்!
9 Parties Launched: தமிழகத்தில் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் 9 கட்சிகளை தொடங்கி உள்ளனர். அவை என்னென்ன கட்சிகள், யாரால் தொடங்கப்பட்டன என்பன குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உதயமான கட்சிகள்
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளே பிரதான கட்சிகளாக விளங்கி வருகின்றன. இந்த இரு கட்சிகளில் இருந்து விலகி சென்றவர்கள் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதிமுகவில் இருந்து விலகியவர்களே அதிக அளவிலான கட்சியை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தொடங்கிய கட்சிகளின் எண்ணிக்கை 9- ஆக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில்,
மேலும் படிக்க: தவெக விசில் சின்னம் பொறித்த 3,926 பாத்திரங்கள் பறிமுதல்.. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமறைவு.. போலீசார் வலைவீச்சு!
அமமுக: சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன், அதிமுகவில் இருந்து விலகி கடந்த 2018- ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி அந்த கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து வருகிறார். இதன் பிறகு, ஆர். கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இவரது கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதுடன் தேர்தலை சந்திக்க உள்ளது.
எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர்- அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை கடந்த 2017- ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது, அதிமுகவில் உள்ள சில ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். இதைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினார். பின்னர், அரசியல் வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனையின் காரணமாக 2019 ஆம் ஆண்டு அமைப்பை கலைத்துவிட்டு, அதிமுகவில் இணைவதாக அறிவித்தார்.
எம் ஜி ஆர்- ஜெஜெ திராவிட முன்னேற்ற கழகம்: தீபாவின் கணவர் மாதவன் அவருக்கு போட்டியாக எம்.ஜி. ஆர்- ஜெஜெ திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மனைவி தீபா தொடங்கிய அமைப்பில் நிர்வாகிகளை நியமிப்பதில் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2017- ஆம் ஆண்டு இந்த கட்சியை மாதவன் அறிவித்திருந்தார்.
அண்ணா எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்: சசிகலாவின் அக்கா மகனும், டிடிவி தினகரனின் தம்பியுமான பாஸ்கரன் கடந்த 2018 ஆம் ஆண்டு அண்ணா எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். மேலும், ஜெயலலிதா இருக்கும்போது அரசியலுக்கு வந்துள்ளேன் என்று தனது பேச்சை தொடங்கினார்.
அண்ணா திராவிடர் கழகம்: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனுடன் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலாவின் தம்பி திவாகரனும் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். பின்னர், அதிமுகவில் தன் கட்சியை இணைத்தார்.
எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்: திமுக, அதிமுக, பாமக மக்கள் நல உரிமை கழகம், தேமுதிக என பல்வேறு கட்சிகளில் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது, எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
புரட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்: அதிமுகவில் சசிகலாவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த புகழேந்தி, அமமுக, ஓபிஎஸ் அணிக்கு சென்று பின்னர் தனக்கென புரட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கி மக்களவைத் தேர்தலை சந்தித்து இருந்தார். பின்னர், அந்த குழுவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என மாற்றினார். பிறகு, அதனை விட்டுவிட்டு திமுகவில் ஐக்கியமானார்.
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்: ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, பாமக நிறுவனர் ராமதாசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களால் 9 கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி.. வெளியான விசிக வேட்பாளர் பட்டியல்..