காங்கிரஸ் – இந்திய கம்யூ. மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்… திமுக தலைமையிடம் பட்டியல் அளிப்பு.. முழு விவரம் இதோ!
DMK Alliance Parties: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணயில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைமையிடம் அளித்துள்ளது. அதில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை திமுக தேர்வு செய்து அளிக்க உள்ளது.

திமுக தலைமையிடம் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் அளிப்பு
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை திமுக தலைமையிடம் அளித்துள்ளது. இதில், கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம், ஸ்ரீவைகுண்டம், விருதுநகர், ஆலங்குளம், தென்காசி, காரைக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், நாங்குநேரி, திருநெல்வேலி, ஊத்தங்கரை, மணப்பாறை, முசிறி, சோளிங்கர், சிதம்பரம், வேடசந்தூர், மொடக்குறிச்சி, மதுரை மத்தி, திருப்பூர் மேற்கு, கோவை தெற்கு, மதுராந்தகம், கலசப்பாக்கம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மேட்டூர், வேளச்சேரி, அம்பத்தூர், எழும்பூர், பொன்னேரி, மயிலாடுதுறை, கூடலூர், கும்பகோணம், உதகை, சிவகாசி, விருத்தாசலம் ஆகிய 39 தொகுதிகளை குறிப்பிட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 28 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்க உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்
இதே போல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடக்கூடிய தொகுதிகள் பட்டியலை திமுக தலைமையிடம் அளித்துள்ளது. அதில், தளி, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வால்பாறை, தொண்டாமுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பூர் வடக்கு, பவானி சாகர், பழனி, சிவகங்கை ஆகிய 10 தொகுதிகளை அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்க உள்ளது.
மேலும் படிக்க: “தமிழ்நாடு vs டெல்லி”.. நாம் சொன்னது போலவே முடிவெடுப்பது டெல்லிதான்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!
மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்
இதேபோல, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிடவுள்ள தொகுதிகளுக்கான பட்டியலை திமுக தலைமையிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த பட்டியலில், மதுரை தெற்கு, திருச்சி கிழக்கு, மணப்பாறை, சாத்தூர், வேளச்சேரி, கோவில்பட்டி, கடலூர் அல்லது புவனகிரி, நெல்லை அல்லது பாளையங்கோட்டை, பல்லடம், கிணத்துக்கடவு ஆகிய 10 தொகுதிகளை குறிப்பிட்டுள்ளது. இதில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளை திமுக தலைமை தேர்வு செய்து அளிக்கும். இதில், 3 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு இழுபறி
கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதில், 4 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றிருந்தது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் கட்சி 40 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால், 28 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்கப்பட்டது.
கட்சிகளுக்கு தொகுதிகள் குறைவாக ஒதுக்கீடு
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, கூடுதலாக 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதே போல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, மதிமுகவுக்கு கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 தொகுதிகள் குறைக்கப்பட்டு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “10+1 சீட்கள் கேட்டு விசிக பிடிவாதம்”.. இறங்கி வருமா திமுக?.. கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி..