வாக்கு எண்ணிக்கை முதல் இறுதி முடிவுகள் வரை.. 62 மையங்களில் என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ!
Tamil Nadu Election Votes Counting: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணி முதல் இறுதி முடிவுகள் வரை என்ன நடக்கும் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கோப்புப் புகைப்படம்
தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை திங்கள்கிழமை ( மே 4- ஆம் தேதி) நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் மின்னணு வாக்குகள் எண்ணும் பணிக்காக 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் என்னும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த பணிகளில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான வாக்குகள் எண்ணும் பயிற்சி மற்றும் உரிய ஆலோசனைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு சட்ட பேரவை தொகுதிக்கு ஒரு தேர்தல் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் அலுவலர் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் பணி
இதை தவிர்த்து, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் அதற்கு ஏற்றவாறு மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு மையத்திலும் குறைந்தது 14 மேஜைகள், அதிகபட்சமாக 24 மேதைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், ஒரு நுண் பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு கணினி உதவியாளர் என மொத்தம் 4 பேர் பணியில் இருப்பர்.
மேலும் படிக்க: கூட்டணி கட்சிகளுக்காக விசிக சரியாகப் பணியாற்றவில்லை.. நிர்வாகிகளை விளாசிய திருமாவளவன்..
500 வாக்குகளுக்கு ஒரு மேஜை அமைப்பு
500 வாக்குகளுக்கு ஒரு மேஜை அமைக்கப்பட்டிருக்கும். சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எவ்வளவு என்ற எண்ணிக்கை விவரம் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும். அத்துடன் வாக்குகள் செல்லுபடி ஆனவை, செல்லுபடி ஆகாதவை என தனித்தனியாக பிரித்து வைக்கப்படும். இதில், ஒரு வாக்கு சீட்டில் வேட்பாளருக்கான இடத்தில் குறியீடு மற்றும் சீல், வேட்பாளரின் பெயர் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே அந்த வாக்கு செல்லுபடி ஆகும். அஞ்சல் வாக்கு படிவத்தில் உரிய அலுவலரின் கையொப்பம் மற்றும் முத்திரை இல்லையெனில் அந்த வாக்கு செல்லாததாகிவிடும்.
இறுதி சுற்றுக்கு முன் தபால் வாக்கு முடிவுகள்
மேலும், தபால் வாக்கில் இரு வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் குறியீடு செய்யப்பட்டிருந்தால் அந்த வாக்கும் செல்லாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் என்னும் பணி விரைவில் முடிவடைந்து விடும். ஆனால் தபால் வாக்குகள் எண்ணும் பணி சற்று தாமதமாகும் என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி சுற்றுக்கு முன்னதாக தபால் வாக்குகள் முடிவு வெளியிடப்படும். வாக்குகள் காண்பிக்கப்படும் போது அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் தங்களிடம் உள்ள 17 சி படிவத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள வாக்குப்பதிவு விவரங்களை ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: வழக்கறிஞர் நெல்சனை வீடு புகுந்து தாக்கிய நாம் தமிழர் ஆதரவாளர்? – வெளியான பரபரப்பு தகவல்