தமிழக காங்கிரஸுக்கு பெண் தலைவர்?.. டெல்லி மேலிடம் தீவிர ஆலோசனை.. மே 10-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு?
தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை, கடைசியாக 1982-ம் ஆண்டு மரகதம் சந்திரசேகர் பெண் தலைவராகப் பதவி வகித்தார். அதற்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் கூடத் தலைவராக நியமிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பெண் தலைவர் நியமிக்கப்படுவது கட்சிக்கு ஒரு புதிய உற்சாகத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல்கள், மாநிலத் தலைமை மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிது. குறிப்பாக, தமிழக காங்கிரசுக்கு ஒரு பெண் தலைவரை நியமிக்க டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, தேர்தலுக்குப் பிறகு தான் பதவியிலிருந்து விலகப்போவதாக அவர் தெரிவித்திருந்ததே கட்சிக்குள் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இதையும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..
கட்சிக்குள் கடும் அழுத்தம்:
இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் கட்சிக்குள்ளேயே நிலவிய கடும் அழுத்தங்களே காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மீது ஜோதிமணி எம்.பி. மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றிவரும் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் புகார் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம்:
குறிப்பாக, தேர்தல் கூட்டணியின் போது பெரும்பாலான நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்பியதாகவும், ராகுல் காந்தியின் விருப்பமும் அதுவாகவே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தேசியத் தலைவரின் ஆதரவுடன் செல்வப்பெருந்தகை அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக எழுந்த உட்கட்சி மோதல்களே அவரை பதவி விலகல் முடிவுக்குத் தள்ளியதாகத் தெரிகிறது.
கட்சிக்குள் ஏற்பட்ட இந்த குழப்பான சூழலுக்கு மத்தியில், தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்குச் சாதகமாக இருப்பதால், தனது நிலைப்பாடு சரியானது என நிரூபிக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை கருதுகிறார். இதனால், பதவி விலகல் குறித்த பேச்சிலிருந்து அவர் தற்போது பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
பெண் தலைவருக்கான முன்னுரிமை:
செல்வப்பெருந்தகை பதவி விலக மறுத்தாலும், கட்சிக்குள் நிலவும் அதிருப்தி காரணமாக புதிய தலைவரை நியமிக்க மேலிடம் தயாராகி வருகிறது. பல முன்னாள் தலைவர்களும், மூத்த நிர்வாகிகளும் இந்தப் பதவிக்காகப் போட்டியிட்டு வரும் வேளையில், டெல்லி தலைமையின் பார்வை பெண் தலைவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. பாஜக கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்குத் தமிழகத்தில் நிலவும் எதிர்ப்பை அரசியலாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது. ஒரு பெண்ணுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு வலுவான பிம்பத்தைத் தமிழகத்தில் கட்டமைக்க முடியும் என காங்கிரஸ் தலைமை நம்புகிறது.
வரலாற்றுப் பின்னணி மற்றும் அறிவிப்பு எப்போது?
தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை, கடைசியாக 1982-ம் ஆண்டு மரகதம் சந்திரசேகர் பெண் தலைவராகப் பதவி வகித்தார். அதற்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் கூடத் தலைவராக நியமிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பெண் தலைவர் நியமிக்கப்படுவது கட்சிக்கு ஒரு புதிய உற்சாகத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: Tamil Nadu Election 2026 Results Live Streaming: தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை எங்கு, எப்போது பார்க்கலாம்?.. முழு விவரம்!!
தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாகின்றன. முடிவுகள் வெளியான உடனேயே தலைவர் அறிவிப்பு வருமா என்றால், அதற்கான வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது. புதிய தலைவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக மே 10-ம் தேதிக்கு மேல் ஆகலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.