அதிமுகவுடன் கூட்டணியா? – இபிஎஸ் பரப்புரையில் தவெக கொடி!
AIADMK-TVK Alliance: நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக பரப்புரையில் தமிழக வெற்றிக் கழகக் கொடி பறந்தது அரசியல் உலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இது அதிமுக-தவெக கூட்டணி குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது. விஜய் திமுகவுக்கு மாற்று என்று அறிவித்தாலும், அரசியல் நெருக்கடியால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாமக்கல், அக்டோபர் 9: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பிடிக்கப்பட்ட சம்பவம் அரசியல் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கல் மாவட்டம், தொகுதி வாரியாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று (அக்டோபர் 8) அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிக்கு வந்தார்.
கூட்டத்தில் பறந்த தவெக கொடி
இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “திமுக கூட்டணியை நம்பி உள்ளது. கூட்டணி தேவைதான் என்றாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமையும் கூட்டணி வலுவாக இருக்கும்” என தெரிவித்தார். வழக்கமாக எடப்பாடி பழனிசாமி பேசும்போது அதிமுக, பாஜக கொடியை பிடித்தபடி தொண்டர்கள் நிற்பார்கள். ஆனால் குமார பாளையம் கூட்டத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறந்து கொண்டிருந்தது.
அதனைச் சுட்டிக்காட்டி, “இங்கே பாருங்கள் கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க.. ஸ்டாலின் அவர்களே.. குமாரபாளையத்தில் உருவாக்கியுள்ள இந்த எழுச்சியின் சத்தம் உங்கள் காதை துளைக்கட்டும்” என தெரிவித்தார்.




இதையும் படிங்க: ஊழல் அமைச்சர்கள் தப்பிக்க மாட்டார்கள்.. எடப்பாடி பழனிசாமி உறுதி!
அதிமுகவுடன் தவெக கூட்டணியா?
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முதல் முறையாக நடிகர் விஜயின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி எதிர்கொள்கிறது. திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என தெரிவித்த விஜய் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாவட்ட வாரியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
அந்த வகையில் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை நடந்த பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: அண்ணனாக இருந்து எல்லாவற்றை செய்வேன்.. விரைவில் சந்திப்பேன் ; வீடியோ காலில் பேசிய விஜய்..
இந்த நிலையில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என விஜய் கட்சி நிகழ்ச்சியின் போது அறிவித்திருந்தார். ஆனால் அவருக்கு மிகவும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் என்ன மாதிரியான முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயின் ஒட்டு மொத்த கோபமும் திமுக மீது இருப்பதால் மீண்டும் அவர்களை ஆட்சியில் அமர்த்த கூடாத வகையில் கூட்டணியில் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் எதுவாக இருந்தாலும் 2026 ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.