‘ அண்ணனாக இருந்து எல்லாவற்றை செய்வேன்.. விரைவில் சந்திப்பேன் ‘ – வீடியோ காலில் பேசிய விஜய்..
Karur Stampede: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், முதல் முறையாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிர் வாழ்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞரின் சகோதரி மற்றும் தாயிடம் பேசிய விஜய், “ஒரு அண்ணனாக எல்லா உதவிகளையும் நான் செய்வேன்” என உறுதி அளித்துள்ளார்.

அக்டோபர் 7, 2025: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த தனுஷ்குமாரின் சகோதரியிடம் “ஒரு அண்ணனாக இருந்து அனைத்தையும் செய்வேன்” என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மாவட்டம் தோறும் சென்று பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வந்தார். செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சிற்றம்பலம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்தார். பின்னர் செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கரூரில் நடந்த துயர சம்பவம்:
கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் முடிந்ததும் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் அங்கு பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதற்காக பல்வேறு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. கரூர் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூர் சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை குற்றம் சாட்டி பேசியிருந்தார்.
வீடியோ கால் மூலம் பேசிய விஜய்:
அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் அல்லது அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கரூர் துயரச்சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கான பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் படிக்க: கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணை கோரிய மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்!
இந்தச் சூழலில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், முதல் முறையாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிர் வாழ்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞரின் சகோதரி மற்றும் தாயிடம் பேசிய விஜய், “ஒரு அண்ணனாக எல்லா உதவிகளையும் நான் செய்வேன்” என உறுதி அளித்துள்ளார்.
நேரில் செல்லும் விஜய்:
அதேபோல், மனைவியையும் மகளையும் இழந்த டாஸ்மாக் ஊழியரிடம் பேசிய விஜய், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், இந்த வீடியோ கால் புகைப்படமாகவோ அல்லது பதிவு செய்யவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்தினருடனும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தலைவர் விஜய் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், விரைவில் கரூர் மக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.