தமிழகம் முழுவதும் நிறைவடைந்த வாக்குப்பதிவு.. சீல் வைக்கப்பட்ட EVM..
Tamil Nadu Assembly Election: வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில், EVM கருவிகளுக்கு தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 4 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 123 பேர் வாக்களித்துள்ளனர்.

கோப்பு புகைப்படம்
ஏப்ரல் 23, 2026: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன், நீண்ட வரிசையில் காத்திருந்து, வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் துறை பிரபலங்கள் கூட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு:
இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சமாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது அது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தலில் அதிக வாக்குப்பதிவு:
காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 1952 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அதிகபட்சமாக பதிவான வாக்குப்பதிவு 77.80% ஆக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது தமிழக தேர்தல் வரலாற்றில் முதன்முறையாகும்.
மக்கள் அனைவரும் காலை முதல் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்தனர். சென்னை குறித்து பேசும்போது, தேர்தல் அலுவலர் குமரகுருபரன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதாவது, மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்த அனைவரும் இரவு 8 மணி ஆகிய பின்னரும் காத்திருந்து வாக்களிக்கலாம் என தெரிவித்தார். யாரும் தங்களது வாக்குரிமையை இழக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்:
வாக்குப்பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில், EVM கருவிகளுக்கு தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 4 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 123 பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும் படிக்க: 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் காத்திருந்து வாக்களிக்கலாம் – சென்னை தேர்தல் அலுவலர் குமரகுருபரன்..
வாக்குப்பதிவு முடிந்ததும், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மின்தடை ஏற்பட்டாலும் செயல்படும் வகையில் நவீன கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
மே.4 வாக்கு எண்ணிக்கை:
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் சுற்றுவாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் EVM-களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இதன் மூலம், 2026 ஆம் ஆண்டுக்கான ஜனநாயக திருவிழா நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.