இனி UPI கிடையாது.. ஸ்டிரிக்ட் ஆக சொல்லும் கடை உரிமையாளர்கள்.. காரணம் என்ன?
UPI Payments Decline in India | இந்தியாவின் பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை யுபிஐ சேவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், வணிகர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருவதால் யுபிஐ மூலம் பணத்தை ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக யுபிஐ பண பரிவர்த்தனை சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் பரவலாக யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பெரும்பாலான கடைகள் யுபிஐ சேவையை குறைத்து வருகின்றன. குறிப்பாக பெங்களூரில் உள்ள பெரும்பாலான கடைகள் யுபிஐ கட்டண முறையை தவிர்த்து கையில் பணத்தை பெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு காரணம், வருமான வரித்துறை நோட்டீஸ் (Income Tax Notice) தான். யுபிஐ பயன்படுத்தும் சிறிய கடைகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இதன் காரணமாகவே சிறிய கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை பல இடங்களில் சமீப காலமாக யுபிஐ நிராகரிக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் ரூபாய் நோட்டுகளுக்கு திரும்பும் சிறு, குறு வியாபாரிகள்
இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்படட ஒரு அம்சம் தான் யுபிஐ. வங்கிகளுக்கோ, ஏடிஎம் மையங்களுக்கோ சென்று பணத்தை எடுத்து செலவு செய்வது பொதுமக்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால், நேரடியாக வங்கி கணக்கில் இருந்தே பணத்தை செலவு செய்யும் வகையில், பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக யுபிஐ சேவைகள் அமைந்தன. ஆரம்பகாலத்தில் யுபிஐ சேவைகளை பயன்படுத்த பொதுமக்களும், வணிகர்களும் தயக்கம் காட்டி வந்த நிலையில், தற்போது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக யுபிஐ பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க : யுபிஐ விதிகளில் புதிய மாற்றம்: Chargeback கோரிக்கையில் வங்கிகளுக்கு நேரடி அனுமதி!




இந்தியாவை பொருத்தவரை சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை பயன்பாட்டில் உள்ளது. இதேபோல, சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை அனைத்து பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். யுபிஐ சேவை இவ்வாறு நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில் தற்போது மீண்டும் வணிகர்கள் யுபிஐ-ஐ பயன்படுத்த மறுப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
யுபிஐ மூலம் பணம் பெற வணிகர்கள் மறுப்பது ஏன்?
பெங்களூரில் உள்ள சில வணிகர்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்துவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம் பெங்களூரில் உள்ள சில சிறு வணிகர்களுக்கு வருமான வரி செலுத்துமாரு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக சிறு வணிக நிருவனங்கள் மற்றும் கடைகளுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பது தெரியாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக அவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படாமல் இருந்து வந்தது. அதாவது லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டினாலும் சிறு வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படாமல் இருந்தது.
ஆனால், தற்போது அனைத்து சிறு வணிக வளாகங்கள் மற்றும் கடைகளிலும் யுபிஐ பயன்படுத்தப்படுவதால் வருமானத்தை கணக்கிட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இதன் காரணமாக சிறு வணிகங்கள் மற்றும் கடைகளில் வைக்கப்படு இருந்த யுபிஐ QR கோடுகளை அதன் உரிமையாளர்கள் நீக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.