1 ரூபாய் ஷாம்பூ பாக்கெட்… இந்தியாவில் தொழில் புரட்சிக்கு காரணமான தமிழர் – கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிக் கதை
Success Story : இந்தியாவில் 1980கள் காலக்கட்டத்தில் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்கள் மிகப்பெரிய பாக்கெட்டுகளில் மட்டுமே விற்கப்படும். இதனை எளிய மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை இருந்தது. இதனயடுத்து ஷாம்புவை சிறிய பாக்கெட்டுகளில் அறிமுகப்படுத்தி இந்தியாவின் தொழில்புரட்சிக்கு வித்திட்டவர் சின்னி கிருஷ்ணன்.

இந்தியாவில் 1980கள் காலகட்டத்தில் சோப்பு, ஷாம்பு (Shampoo), எண்ணெய் போன்ற பொருட்கள்க மிகப்பெரிய பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களில் விற்கப்பட்டு வந்தன. அவற்றின் விலை அதிகம் என்பதால் எல்லோராலும் அதனை விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இதனால் அந்த பொருட்கள் எல்லாம் பணக்கார வர்க்கத்துக்கு மட்டுமே என்ற நிலை இருந்தது. அந்த நிலையை உடைத்தவர் தமிழ்நாட்டின் கடலூரை (Cuddalore)சேர்ந்த சின்னி கிருஷ்ணன். அந்த வகையில் இன்று நாம் 1 ரூபாய், 2 ரூபாய் என நாம் தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்தும் ஷாம்பு பாக்கெட்டுகளுக்கு வித்திட்டவர் அவர் தான். இது இந்தியாவில் மிகப்பெரிய தொழில்புரட்சிக்கு காரணமாக அமைந்தது.
சிறிய கனவில் தோன்றிய புரட்சி
சின்னி கிருஷ்ணன் ஆரம்பத்தில் கடலூர் மாவட்டத்தில் மருந்து விற்பனை தொழிலில் ஈடுட்டுவந்தார். அப்போது வறுமையின் காரணமாக பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஏழைக் குழந்தைகளை கவனிக்கிறார். எனவே தான் விற்கும் எந்த பொருளும் எளிய மக்கள் வாங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். அவரது கனவு தான் இன்று சோப்பு, ஷாம்பு முதல் மசாலா பொருட்கள் வரை அனைத்தையும் சிறிய பாக்கெட்டுகளில் விற்பதற்கு காரணமாக அமைந்தது.
அந்த காலகட்டங்களில் கிராம மக்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தனர். அவர்களால் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க முடியாமல் கஷ்டப்பட்டனர். இதனை மாற்ற 100 கிராம், 50 கிராம், 20 கிராம் போன்ற சிறிய பாக்கெட்டுகளில், சாம்பு, பவுடர் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இதற்காக அவர் பாக்கெட்டுகளை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.




இதையும் படிக்க : மூங்கில் இலையில் துணிகள்… ரூ.200 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்
சாஷே கண்டுபிடிப்பு
தோட்டங்களில் தண்ணீர் விட பயன்படுத்தப்பட்டு வந்த பிளாஸ்டிக் குழாய்களை வெட்டி, அதில் தண்ணீர் நிரப்பி, பின்னர் இரண்டு பக்கமும் வெல்ட் செய்யும் நடைமுறைகளை மேற்கொண்டார். ஆனால் அவரது முதல் முயற்சி தோல்வியடைந்தாலும் தொடர்ந்து முயன்று சாஷே எனப்படும் சிறிய பாக்கெட்டுகளை உருவாக்கினார். இதன் மூலம் ஹேர் ஆயில், தேன், ஷாம்பு ஆகிய வற்றை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கினார்.
இதற்காக அவர் பெரும் கனவுகளை சுமந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் தனது 48 வயதில் மரணமடைந்தார். தொழிலுக்காக அவர் வாங்கிய வங்கி கடன் ரூ.2 லட்சத்துக்காக வீடு மற்றும் சொத்துக்களை அவரது குடும்பத்தினர் இழந்தனர்.
குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க அவரது மகன்கள் ராஜ்குமார், வழக்கறிஞராக இருந்த அசோக்குமார் ஆகியோர் தங்கள் வேலைகளை விட்டு வியாபாரத்தில் இறங்கினர். வெல்வெட் ஷாம்பூ என்ற பெயரில் 2 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தினர். விரைவிலேயே அவரது ஷாம்பூ பிரபலமடைந்தது. இந்தியா தாண்டி வெளிநாடுகளில் வியாபாரம் வளர்ந்தது.
இதையும் படிக்க : தொழிலில் தோல்வி, பறிபோன வீடு… நம்பிக்கையுடன் ரூ.12 கோடி வருமானம் தரும் நிறுவனத்தை உருவாக்கிய ரகுநாதன்
1 ரூபாய்க்கு சிக் ஷாம்பூ
இந்த நிலையில் சின்னி கிருஷ்ணனின் இளைய மகன் சி.கே.ரங்கநாதன், தனியாக கவின் கேர் நிறுவனத்தை துவங்கி, சிக் ஷாம்பூவை வெறும் 1 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தினர். அவர் தனது தந்தை சின்னி கிருஷ்ணன் நினைவாக சிக் ஷாம்பு என அதற்கு பெயரிட்டார். கிராமப்புறங்களை குறி வைத்து விளம்பரங்கள் மூலம் சிக் ஷாம்பூவை பிரபலப்படுத்தினார். இதனையடுத்து அவரது நிறுவனம் தென்னிந்தியாவில் முன்னணி ஷாம்பூ பிராண்டாக மாறியது.
தாமதமான அங்கீகாரம்
சாஷே எனப்படும் சிறிய பாக்கெட்டுகளின் உண்மையான கண்டுபிடிப்பாளர் சின்னி கிருஷ்ணன் என்பதற்கான அங்கீகாரம் அவர் உயிரோடு இருக்கும் போது கிடைக்கவில்லை. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு யுவர் ஸ்டோரி நடத்திய டிஸ்ரப்டர்ஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியில் அவர் மறைவுக்கு பிறகு லெஜெண்ட் ஆஃப் டிஸ்ரப்சன் அவார்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது.