Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொழிலில் தோல்வி, பறிபோன வீடு… நம்பிக்கையுடன் ரூ.12 கோடி வருமானம் தரும் நிறுவனத்தை உருவாக்கிய ரகுநாதன்

Success Story : சிறு தோல்விகளுக்கே பலரும் துவண்டு விடும் சூழ்நிலையில், தொழிலில் தோல்வியடைந்து, வீடு அனைத்தையும் இழந்த ஒருவர், நம்பிக்கையுடன் போராடி ரூ.12 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் தான் கேரளாவின் ஆச்சூஸ் நிறுவனத்தின் தலைவர் ரகுநாதன்.

தொழிலில் தோல்வி, பறிபோன வீடு…  நம்பிக்கையுடன் ரூ.12 கோடி வருமானம் தரும் நிறுவனத்தை உருவாக்கிய ரகுநாதன்
ரகுநாதன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Sep 2025 14:42 PM

வெற்றி பெற்றவர்கள் பலரது வாழ்க்கையில் எடுத்த உடனேயே அவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்காது. பல கட்ட போராட்டங்கள், தோல்விகள் அவமானங்கள் இவை எல்லாவற்றையும் சந்தித்து தான் இந்த நிலைமைக்கு வந்திருப்பார்கள். அப்படி ஒருவர் தான் கேரளாவைச் (Kerala) சேர்ந்த ரகுநாதன். தன் தந்தையின் ஓய்வு பணத்தில் இருந்து கிடைத்த பணத்தை வைத்து தொழில் தொடங்குகிறார். ஆனால் சில மாதங்களில் கடும் நட்டத்தை சந்திக்கிறார். வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து டிக்கெட்டிற்கு கூட காசில்லாமல் மும்பைக்கு செல்கிறார். ஆனால் இன்று அதே ரகுநாதன் தான் இன்று ரூ. 12 கோடி வருமானம் பெறும் நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தோல்வியிலிருந்து தொடங்கிய பயணம்

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரகுநாதன். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு தனது தந்தை ஓய்வு பெற்றபோது கிடைத்த ரூ.96,000 பணத்தில் இருந்து, சாலக்குடியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் தொடங்குகிறார்.  ஆனால் தொடங்கிய ஆறுமாதங்களில் ஏற்பட்ட கடும் நஷ்டத்தால் நிறுவத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். முதலீடு போனதுடன் கூடுதலாக ரூ.15,000 கடனும் சேருகிறது. இதனால் தனது வீட்டையும் இழக்கும் நிலைக்கு ஆளாகிறார்.

இந்த நிலையில் மனமுடைந்த ரகுநாதன், மும்பைக்கு செல்கிறார். அங்கு ஒரு நூற்பாலையில் உதவியாளராக வேலைக்கு சேர்கிறார். பின்னர் அவரது நண்பர் நிர்மலிடம் இருந்து இயந்திர பாகங்கள் தயாரிக்கும் திறனை கற்றுக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரது தொழிற்சாலையை ரகுநாதன் நடத்தும் வாய்ப்பை பெறுகிறார்.  இதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.

இதையும் படிக்க : மலிவான இடியாப்ப இயந்திரம்…. பலரின் தொழில் கனவை நினைவாக்கிய சேலம் இளைஞர்!

இதனையடுத்து கடந்த 2000 ஆம் ஆண்டு மீண்டும் கேரளாவுக்கு திரும்பிய அவர் பைக்கில் தமிழ்நாடு முழுவதும் பயணித்து கம்பளி துணிகளை விற்பனை செய்யத் தொடங்குகிறார். இதனையடுத்து கடந்த 2001 ஆம் ஆண்டு இரிஞ்சிலக்குடாவில் ஆச்சுஸ் எனும் கடையத் தொடங்கி, மரப்பொருட்கள் விற்கத் தொடங்குகிறார்.  அவரது நிறுவம் நல்ல வளர்ச்சி அடைகிறார். கடந்த 2002 ஆம் ஆண்டு கொடுங்கல்லூரில் மற்றொரு பிரிவையும் தொடங்கினார்.

பெரும் முன்னேற்றத்துக்கான வாய்ப்பு

கடந்த 2016 ஆம் ஆண்டு மும்பை ஆங்கர் ஆஃப்ஷோர் கபப்பலுக்கான மரப்பொருட்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் அவருக்கு கிடைக்கிறது. முதல் ஒப்பந்தத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், அதில் கிடைத்த அனுபவம் அவருக்கு பெரும் முன்னேற்றத்துக்கான காரணமாக அமைந்தது.  பின்னர் ஆதித்யா, மெரின் ஆஃப்ஷோர், ஜீவன் ஆஃப்ஷோர் நிறுவனங்களுக்கான பணிகளையும் மேற்கொள்கிறார்.

இதையும் படிக்க : வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய நிறுவனம்… ரூ.7 கோடி டர்ன் ஓவர்… சென்னையின் பிரபல டீ பிராண்டை உருவாக்கிய இளைஞர்

இந்திய கடற்படையுடன் ஒப்பந்தம்

அவரது திறமை நாடு முழுவதும் மிகவும் பிரபலமாகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படையுடன் ஒப்பந்தம் செய்து கப்பல்களுக்கு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். இதுவரை 22 கப்பல்களுக்கு உள்கட்டமைப்பு பணிகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். குறிப்பாக ஐஎன்எஸ் விக்ராந்த் விமானக் கப்பலில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கான விஐபி அறைகளையும் அவர் வடிவமைக்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வலியாம்பரம்பில் உள்ள 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் ஆச்சூஸ் இண்டஸ்டிரீஸ் மற்றும் பிராமிஸ் மரைன் அண்ட் ஆஃப்ஷோர் நிறுவனங்களை நடத்தி வருகிறார். வாகனங்களுக்கு கண்டெய்னர் உற்பத்தி செய்யும் புதிய யூனிட்டையும் அவர் தொடங்கியுள்ளார்.

ரகுநாதன் முதன்முறையாக தொழில்தொடங்கி தோல்வியடைந்ததுடன் வீடு உட்பட அனைத்தையும் இழந்து நின்றார். ஆனால் அவர் சோர்ந்து விடவில்லை. விடாமுயற்சியுடன் போராடி  தற்போது அவர் ரூ. 12 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது வாழ்க்கை சிறிய தோல்விகளுக்கு துவண்டுவிடும் நபர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியது.