எளிய நகரத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம்…. இன்று 25 நாடுகளில் விற்பனை…. இதயம் நிறுவனர் வென்ற கதை
From Small To Giant : சந்தைகளில் கலப்பட எண்ணெய் விற்கப்படுவதை பார்த்த விவிவி ராஜேந்திரன், தரமான எண்ணெய்யை விற்பனை செய்ய முடிவெடுக்கிறார். அப்படி ஒருவானது தான் இதயம் பிராண்ட். இன்று 25 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வெற்றிக்கதையைப் பார்க்கலாம்.

இதயம் இன்று மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு பிராண்ட். இதயம் நல்லெண்ணய் பயன்படுத்தாத வீடுகளே இருக்க முடியாது. ஜோதிகா இடம் பெற்ற இதயம் நல்லெண்ணய் விளம்பரங்கள் 90ஸ் கிட்ஸ்களிடையே மிகவும் பிரபலம். ஆனால் இந்த வெற்றி ஒரே நாளில் கிடைக்கவில்லை. வியாபாரத்துக்கு பெயர் பெற்ற விருதுநகரில் கடந்த 1986 ஆம் ஆண்டு வி.வி.வி. ராஜேந்திரன் என்பவரால் தொடங்கப்பட்டது இதயம் நிறுவனம். வி.வி.வி.ராஜேந்திரன் ஒரு விவசாயக் குடும்பத்தை சார்ந்தவர். அவருக்கு எண்ணெய் வியாபாரத்தில் எந்த பின்புலமும் இல்லை. குறிப்பாக விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்லெண்ணைய் தயாரிப்பதற்கான மூல பொருட்களான எள் எங்கும் விளைவிக்கப்படவில்லை. ஆனால் எண்ணெய் தயாரிப்புகளின் தலைநகராக இருக்கிறது. இதற்கு வி.வி.வி.ராஜேந்திரனின் உழைப்பு ஒரு முக்கிய காரணம்.
ஆரம்பகட்ட சவால்கள்
சந்தைகளில் கிடைக்கும் எண்ணெய்களைை பார்த்த அவருக்கு, நிறைய கலப்படங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து மக்களுக்கு தரமான எண்ணெய் வழங்க வேண்டும் என்ற நோக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்படி தொடங்கப்பட்டது தான் இதயம். சந்தைகளில் பெரிய பெரிய பிராண்டுகள் இருக்கும்போது ஒரு சிறிய நகரத்தில் இருந்து வரும் இதயம் நல்லெண்ணெய் மீது மக்களுக்கு ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லை. இதனால் ஆரம்பத்தில் தனது பிராண்டை பிரபலப்படுத்த கடும் சவால்களை சந்தித்தார்.
இதையும் படிக்க : 4 தலைமுறையாக தொடரும் வெற்றி… போத்தீஸ் உருவானது எப்படி தெரியுமா?




மேலும் தொழிலை தொடர்ந்து நடத்த அவரிடம் இருந்த பணம் போதவில்லை. விளம்பரம் செய்வதற்கும் போதிய நிதி அவரிடம் இல்லை. எனவே வங்கியில் கடன் வாங்க முடிவெடுக்கிறார். ஆரம்பத்தில் எளிமையான பேக்கிங்கில் விற்றாலும், தரத்தில் எந்த சமரசமும் அவர் செய்ய வில்லை. தரம் தான் அவரது குறிக்கோளாக இருந்தது.
இதயம் நிறுவனத்தின் வளர்ச்சி
இதயம் நல்லெண்ணெய் சுத்தமானது என மக்களிடையே வாய் மொழி வாயிலாக பிரபலமானது. இதன் பிறகு 1990 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இதயம் பிரபலமானது. இதனையடுத்து சன்ஃபிளவர் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்ற தயாரிப்புகளை தொடங்கினார். அவற்றுக்கும் நல்ல மதிப்பு கிடைத்தது. இதயம் நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது 25 நாடுகளுக்கும் மேல் விற்பனையாகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி மதிப்பை தாண்டியுள்ளது. தற்போது இந்தியாவின் முன்னனி பிராண்டாக இதயம் வளர்ந்திருக்கிறது.
இதையும் படிக்க : சரியான திட்டமிடல்… வித்தியாசமான வியாபர யுக்தி – ரூ.2000 கோடி நிறுவனமாக வளர்ந்த ஆச்சி
இதயம் நிறுவனத்தின் வெற்றியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
- வாடிக்கையாளர்களை ஏமாற்றமால் தரமான பொருட்களை விற்பனை செய்தால், விளம்பரம் இல்லாமலும் கூட மக்களின் ஆதரவைப் பெறலாம்.
- தொழில் துவங்கியவுடன் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. அதற்கு நம்பிக்கையுடன் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
- நல்ல தயாரிப்புகள் மக்களிடையே தானாக சென்றடையும்.