Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அருண் ஐஸ்கிரீம் டூ ஆரோக்கியா பால்…. கல்லூரி தேர்வில் தோற்றவர், வாழ்க்கையில் வென்ற கதை!

From Exam Anxiety to Business Empire: கல்லூரி கணிதத் தேர்வில் மூன்றாவது முறையாக தேர்வு எழுதும்போது ஏற்பட்ட பதட்டத்தால் பாதியிலேயே வெளியேறிய நபர் இன்று கோடிக்கணக்கான சொத்து மதிப்பு கொண்ட ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் தலைவர். அருண் ஐஸ்கிரீம் தொடங்கி ஆரோக்கியா பால் வரை ஒரு பண்ணாட்டு நிறுவனமாக வளர்ந்து எப்படி என இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அருண் ஐஸ்கிரீம் டூ ஆரோக்கியா பால்…. கல்லூரி தேர்வில் தோற்றவர், வாழ்க்கையில் வென்ற கதை!
ஆர்.ஜி.சந்திரமோகன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Jul 2025 21:49 PM

உயர் கல்வி படித்தவர்களால் தான் இந்திய தொழிற்துறையில் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை உடைத்திருக்கிறார் ஆர்.ஜி சந்திரமோகன். திறமையும் சரியான திட்டமிடலும் இருந்தால் எல்லோராலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதற்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம். ஆர்.ஜி.சந்திரமோகன் ஹட்ஸன் ஆக்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருக்கிறார். இவர் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கலில் பிறந்தவர். வெறும் ரூ.13,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று ரூ.234.16 கோடி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.  தொழில்துறையில் இவரது பங்களிபபை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்திருக்கிறது. அவரின் பயணமும், அருண் ஐஸ்கிரீம் என்ற பிரபலமான பிராண்ட் உருவான கதையும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

 சென்னை ராயபுரத்தில் 250 சதுர அடி பகுதியில், வெறும் ரூ.25,000 முதலீட்டில் ஒரு ஐஸ்கிரீம் உற்பத்தி தொழிற்சாலை துவங்கினார் சந்திரமோகன். இதில் ரூ.12,000 ரூபாய் வங்கியில் இருந்து கடனாக பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மூன்று ஊழியர்கள், ஒன்பது புஷ் கார்ட் மற்றும் ஆறு டிரைசிக்கிள்கள் மூலம் அருகிலுள்ள பகுதிகளில் ‘அருண் ஐஸ்கிரீம்’ என்ற பெயரில் விற்பனை செய்யத் தொடங்கினார்.

கணிதத்தில் தோற்றவர்,  வாழ்க்கையை வென்ற கதை

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் பிறந்த சந்திரமோகன் பி.யு.சி. தேர்வில் கணிதப் பாடத்தில் இருமுறை தோல்வியடைந்திருக்கிறார். மூன்றாவது முறையாக எழுதும்போதும் மனதளவில் பதட்டத்தால் தேர்வறையை விட்டுவிட்டு வெளியே வந்துவிட்டார். இதனையடுத்து அவரது குடும்ப வருமானம் குறைந்துவிட்டது. அவரது அப்பா நடத்தி வந்த சிறிய கடை மூடப்பட்டு குடும்பம் வறுமையில் வாடியது. இதுவே அவரை தனியாக தனது வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ள தூண்டியது.

பன்னாட்டு பிராண்டாக வளர்ந்த ஹட்சன்

50 ஆண்டுகளுக்கும் மேலாக பால் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்த சந்திரமோகன், இன்று ஹட்ஸன் ஆக்ரோ நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அருண் ஐஸ்கிரீம், ஆரோக்யா பால், ஹட்ஸன் தயிர் போன்ற பிராண்டுகள் இந்தியாவின் முன்னணி பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகளாக உள்ளன. தற்போது, ஹட்ஸன் நிறுவனம் 10,000 கிராமங்களில் உள்ள சுமார் 4 லட்சம் பண்ணையர்களிடமிருந்து தினசரி பாலை நேரடியாக வாங்குகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பட்டு வருவதுடன் 42 நாடுகளுக்கும் பால் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

கல்லூரியில் முற்றிலும் தோல்வியடைந்த ஒருவர் இன்று இந்திய மதிப்பில் ரூ.19,000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக இருக்கிறார். இவரது மகன் சி. சத்யன் தற்போது ஹட்ஸன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பணியாற்றுகிறார்.

ஆர்.ஜி சந்திரமோகனின் வாழ்க்கை, ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கான நேரடி எடுத்துக்காட்டு. ஒரு ஐஸ்கிரீம் வண்டியில் தொடங்கிய வாழ்க்கை இன்று ஒரு பில்லியன் டாலர் கம்பெனியாக மாறியிருப்பது வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு சிறந்த முன்னுதாரணம்.