Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறதா?.. உண்மை என்ன?
Post Office Savings Schemes | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உண்மையாகவே அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்வது அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும். அந்த வகையில் பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்காக அரசு பல வகையான பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை தபால் நிலையங்கள் மூலம் செயல்படுத்துகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளதால், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. அது, உண்மையா?, ஏன் அவ்வாறு கூறப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலகங்கள் மூலம் அசத்தலான திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு
அரசு அல்சஞங்கள் மூலம் பல அசத்தலான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிலையான வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரித்தி யோகனா என ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப தனித்துவமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஒவ்வொரு திட்டங்களுக்கு ஒவ்வொரு வகையான வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில், அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பொது சேமிப்பு கணக்குகள், தொடர் வைப்பு நிதி, மாதாந்திர வருமான திட்டம் மற்றும் கிசான் விகாஸ் போன்ற திட்டங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதங்களே வழங்கப்படுகின்றன. இதில் ஆண், பெண் என்ற எந்த வேறுபாடும் இல்லை.
இதையும் படிங்க : தபால் அலுவலகம் உங்கள் சேமிப்பு கணக்கை முடக்கலாம்! காரணம் என்ன தெரியுமா?




அஞ்சலக சிறப்பு திட்டங்கள் – அதிக வட்டி வழங்கும் அரசு
அனைத்து சேமிப்பு திட்டங்களுக்கும் அரசு ஒரே மாதிரியான வட்டி விகிதத்தை வழங்கும் நிலையில், சில சிறப்பு சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றன. அதாவது, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY – Sukanya Samriddhi Yojana), மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS – Senior Citizen Saving Scheme) உள்ளிட்ட திட்டங்களுக்கு மற்ற திட்டங்களை விடவும் அதிக வட்டி வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ள நிலையில், அதற்கு அரசு 8.2 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு அரசு 8.2 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுதவிர ஆண்கள், பெண்கள் என அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.