NPS Vs EPF : என்பிஎஸ் Vs இபிஎஃப்.. ஓய்வூதியத்திற்கு சிறந்த திட்டம் எது?
NPS vs EPF | பெரும்பாலான நபர்களுக்கு தங்களது ஓய்வு கால நிதி குறித்த கவலை இருக்கும். அவ்வாறு பொதுமக்கள் தங்களின் ஓய்வு காலத்தின் போது நிதியை குறித்து கவலைப்படாமல் இருப்பதற்காக அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அரசின் சிறந்த திட்டங்களான என்பிஎஸ் மற்றும் இபிஎஃப் ஆகியவற்றில் எது சிறந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் எப்போதும் நிதி தேவை இருந்துக்கொண்டே இருக்கும். மனிதர்களின் வாழ்க்கை பணத்துடன் ஒன்றிணைந்துள்ளது. உணவு, உடை, இருப்பிடம் என அனைத்திற்கும் பணம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. எனவே தான் தொழில் அல்லது வேலைக்கு சென்று பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். ஆனால், மூத்த குடிமக்களுக்கு அப்படி கிடையாது. ஓய்வூதிய பெற்ற பிறகு பொதுமக்கள் கடுமையான நிதி நெருக்கடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதனை தடுக்கவே அரசு ஓய்வூதியத்தை மையப்படுத்தி சில சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஓய்வூதியத்திற்காக பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்கள்
அத்தகைய திட்டங்கள் தான் NPS (National Pension Scheme) மற்றும் EPF (Employee Provident Fund) திட்டங்கள். இந்த இரண்டு திட்டங்களும் அரசால் செயல்படுத்தப்படும் நிலையில், இவற்றில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. என்ன தான் இந்த இரண்டு திட்டங்களும் பல சிறப்பு அம்சங்களை கொண்டு இருந்தாலும், இவற்றில் சில வேறுபாடுகளும் உள்ளன. குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் வருமானம் மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றில் வேறுபடுகின்றன. இந்த நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப் திட்டம் VS என்பிஎஸ் திட்டம்
இபிஎஃப் என்பது வட்டி விகிதங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படும் ஒரு உத்தரவாதமான வருவாய் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு நிலையான வட்டி கிடைக்கும். ஆனால், என்பிஎஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு முதலீட்டு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் முதலீட்டு திட்டம் மற்றும் நிதி மேலாளரை தேர்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த என்பிஎஸ் திட்டத்தில் 18 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் வருமானம் 8 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். ஆனால் இபிஎஃப் திட்டத்தில் இது அப்படியே மாறுபடும். காரணம், இபிஎஃப் திட்டத்திற்கான வட்டியை அரசாங்கம் தான் தீர்மானிக்கும்.
இபிஎஃப் VS என்பிஎஸ் – வரி விலக்கு
என்பிஎஸ் திட்டம் EEE வரிச் சலுகை திட்டத்தின் கீழ் வருகிறது. அதாவது, பங்களிப்புக்கு வரி இல்லை, வட்டிக்கு வரி இல்லை, முதிர்வு தொகைக்கு வரி இல்லை. இந்த மூன்று வரிவிலக்கும் இந்த திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. ஈபிஎஃப் திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் 1961-ன் பிரிவு 80சி-ன் கீழ் விலக்குக்கு தகுதியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.