Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொழில் தொடங்க அரிய வாய்ப்பு! – தபால் நிலைய உரிமையைப் பெறலாம் – தகுதிகள் என்ன?

Post Office Franchise Opportunity : தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கான அரிய வாய்ப்பை இந்திய தபால் துறை வழங்குகிறது. அதன் படி தபால் நிலைய உரிமையைப் பெற்று நீங்களே நடத்தலாம். இதற்கான தகுகிதள் என்ன? எப்படி வருமானம் கிடைக்கும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தொழில் தொடங்க அரிய வாய்ப்பு! – தபால் நிலைய உரிமையைப் பெறலாம் – தகுதிகள் என்ன?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 07 Jul 2025 17:57 PM

மத்திய அரசு நிறுவனமான இந்தியா போஸ்ட் (India Post), வெறும் கடிதங்களை அனுப்புவதற்கான அமைப்பு மட்டும் அல்ல, அதன் சேவைகள் பல்வேறு துறைகளிலும் விரிவடைந்துள்ளது . குறிப்பாக பார்சல் சேவை மற்றும் வங்கி சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக தபால் நிலைய (Post Office) சேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு சிறந்த முதலீட்டு வாய்ப்புகளையும் வழங்குகின்றன.  இந்திய தபால் துறை குறைந்த முதலீட்டில் ஒரு தபால் நிலைய உரிமையை பெறும் வாய்ப்பை வழங்குகிறது.  இதை குறைந்தபட்ச முதலீட்டில் வெறும் ரூ.5000 உடன் தொடங்கலாம். இப்போது அத்தகைய தபால் அலுவலக உரிமையைப் பெறுவதற்கான விதிமுறைகள், தகுதிகள் ஆகியவை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தபால் நிலைய உரிமையை பெறுவதற்கான தகுதிகள் என்ன ?

  • நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • உங்களுக்கு குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
  • உங்களுக்கு  குற்றப் பின்னணி இருக்கக்கூடாது.
  • நீங்கள் ஒரு சட்டபூர்வமான வணிக முகவரி மற்றும் தொடர்பு எண்ணை வழங்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

மேற்சொன்ன தகுதிகள் உள்ள ஒருவர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். உங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்திய தபால் துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

வருமானம் எப்படி கிடைக்கும்?

ஒரு அஞ்சல் அலுவலக உரிமையை பெற்றால், அதில் இருந்து கிடைக்கும் வருமானம் கமிஷனை அடிப்படையாகக் கொண்டது. அஞ்சல் அலுவலகம் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இதற்கான கமிஷன் விகிதங்கள் குறித்த விவரங்கள் உங்களுக்கு முன்பே விளக்கம் அளிக்கப்படும்.

அஞ்சல் அலுவலக உரிமைத் திட்டக் கட்டணம்

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். தபால் அலுவலக உரிமைத் திட்டத்தில் இணைய 5000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் இந்தக் கட்டணத்தை “உதவி இயக்குநர் ஜெனரல், அஞ்சல் துறை” என்ற பெயரில் காசோலையாக சமர்பிக்கலாம்.  மேலும், SC/ST பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், பெண்கள் மற்றும் ஏற்கனவே அரசு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

நமக்கு எப்படி கமிஷன் கிடைக்கும்?

அஞ்சல் அலுவலக உரிமையைப் பெற்ற பிறகு, உங்கள் வருமானம் கமிஷனை அடிப்படையாகக் கொண்டது.

  • பதிவு செய்யப்பட்ட பொருட்களின் ஒவ்வொரு முன்பதிவுக்கும் ரூ.3 கமிஷன் கிடைக்கும்.
  • ஸ்பீட் போஸ்ட் பொருட்களின் ஒவ்வொரு முன்பதிவுக்கும் ரூ.5 கமிஷன்.
  • ரூ.100 முதல் ரூ.200 வரையிலான பண ஆர்டர்களை முன்பதிவு செய்தால் ரூ.3.50 கமிஷன் கிடைக்கும்.
    200 ரூபாய்க்கு மேல் உள்ள மணி ஆர்டர்களுக்கு 5 ரூபாய் கமிஷன் கிடைக்கும்.
  • பதிவு செய்யப்பட்ட மற்றும் விரைவு அஞ்சல் சேவைகளுக்கு மாதத்திற்கு 1000 ரூபாய் கமிஷனாக கிடைக்கும்.
  • அதிகரித்த முன்பதிவுகளுக்கு கூடுதலாக 20 சதவீத கமிஷன் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தபால் அலுவலக உரிமைக்கு விண்ணப்பிக்க, தபால் அலுவலகம் வழங்கிய https://www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அதற்கு முன் விதிமுறைகளை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்து, சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று விளக்கம் பெறலாம்.