Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RBI : கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது.. வங்கிகளுக்கு ஆர்பிஐ அதிரடி உத்தரவு!

RBI Cuts Pre Payment Penalties | வங்கிகள் மூலம் பெறப்படும் தனிநபர் மற்றும் சிறு தொழில் கடன்களை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால் அதற்கு வங்கிகள் கட்டணம் வசூலித்து வந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அதற்கு தடை விதித்துள்ளது. இது குறித்து வங்கிகளுக்கு ஆர்பிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

RBI : கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால் கட்டணம் வசூலிக்க கூடாது.. வங்கிகளுக்கு ஆர்பிஐ அதிரடி உத்தரவு!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 04 Jul 2025 12:08 PM

வங்கிகளில் தனி நபர்கள், சிறுதொழில் நிறுவனங்கள் பெறும் கடன்களில் அசல் தொகையை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் பெறப்படும் கடன்களை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ஆர்பிஐ அதற்கு தடை விதித்துள்ளது. இந்த விதி புளோடிங் ரேட் (Floating Rate) என அழைக்கப்படும் மாறும் வட்டி முறையில் கடன் பெற்றவர்களுக்கு பொருந்தும். இந்த நிலையில், கடன் தொகையை முன்கூட்டியே செலுத்துவது குறித்து ஆர்பிஐ வங்கிகளுக்கு வெளியிட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடன்களை முன்கூட்டியே திருப்பி செலுத்தும் அம்சம்

பொதுவாக வங்கிகளில் கடன் வாங்கும்போது வட்டி விகிதம் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறதோ அதே போல, கடனை திருப்பி செலித்தும் காலமும் நிர்ணயம் செய்யப்படும். அதாவது மாதத்திற்கு ரூ.10,000 விகிதம் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும் என நிர்ணயம் செய்யப்படும். இந்த நிலையில், கடன் பெற்றவர்களுக்கு தங்களது வசதிக்கு ஏற்ப கடனை திருப்பி செலுத்தும் தொகையை அதிகரித்தல், கடனை முன்கூட்டியே மொத்தமாக செலுத்துதல் உள்ளிட்டவற்றை செய்யலாம். ஆனால், அவ்வாறு கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நிலையில் தான் கட்டணம் விதிப்பதற்கு தடை விதித்து ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனி நபர்கள் பெறும் வர்த்தக நோக்கம் இல்லாத கடன்கள், வர்த்தக நோக்கில் தனி நபர்கள் பெறும் சிறுதொழில் கடன்களுக்கு ப்ரீ பேமெண்ட் (Pre Payment) எனப்படும் கடன் தொகையின் அசலை முன்கூட்டியே செலுத்தும் நடவடிக்கைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று தெரிவிதித்துள்ளது. இந்த முக்கிய மாற்றம் 2026 ஜனவரி முதல் வழங்கப்படும் கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்கு பொருந்தும்.

பொதுத் துறை வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கியில்லாத நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என அனைத்திற்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. கடனின் அசல் நிலுவைத் தொகை முழுவதுமாக திருப்பி செலுத்தப்பட்டாலும், கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், திருப்பிச் செலுத்துவதற்கான தொகைக்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

கடன் பெற்ற நாளில் இருந்து லாக் – இன் பீரியட் என எந்த குறிப்பிட்ட கால கட்டுப்பாடுகளும் இல்லாமல் இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. சிறப்பு வட்டியில் வழங்கப்பட்ட கடன், நிலையான வட்டி மட்டும் அல்லாத நிலையான மற்றும் புளோடிங் இணைந்த வட்டியில் பெறப்பட்ட கடன்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.