EPFO: உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி சேர்க்கப்படவில்லையா? இந்த காரணமாக இருக்கலாம்!
EPF Interest Update : 2024 - 25 நிதியாண்டுக்கான வட்டி பிஎஃப் கணக்குதாரர்களுக்கு சேர்க்கப்பட்டது. உங்கள் பிஎஃப் கணக்கில் இன்னும் வரவு வைக்கப்படவில்லையா? இதற்கான பொதுவான காரணங்கள் என்ன? மற்றும் அதற்கான தீர்வு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் பணிபுரியும் ஒவ்வொரு மாதமும், உங்கள் சம்பளத்திலிருந்து ஒரு பகுதி பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund ) என்ற பெயரில் உங்கள் கணக்கில் சேமிக்கப்படுகிறது. இதுவே உங்கள் எதிர்காலத்திற்கான ஒரு நிதி அடித்தளம். இது ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாகும். இப்படி சேமிக்கப்படும் தொகைக்கு மாதம் வட்டியும் வழங்கப்படும். இந்த வட்டியானது வருடத்திற்கு ஒரு முறை உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். இந்த நிலையில் சமீபத்தில் பிஎஃப் (PF) கணக்குதாரர்களுக்கு 2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வட்டி (Interest) வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிலருக்கு மட்டும் அவர்கள் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கட்டுரையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வட்டி வழங்குவது தாமதமாவதற்கு காரணம் என்ன?
இபிஎஃப் கணக்கு ஆண்டுதோறும் வட்டி மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதியுடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.25 சதவிகிதம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி உடனடியாக கணக்கில் சேர்வது கிடையாது. இதற்கான காரணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
- முதலில், உங்கள் பெயரில் மாதம் சேமிக்கப்பட்ட தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்குவது என கணக்கிடுவார்கள்.
- பின் அது வங்கிகளில் உள்ள விவரங்களோடு ஒத்துப்போகிறதா என்று தெரிந்துகொள்வார்கள்.
- பின் எல்லா விவரங்களும் சரியாக இருக்கிறதா என இபிஎஃப் அலுவலகம் சரி பார்க்கும்.
- இந்த வேலைகள் முடிய சில வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம்.
இதையும் படிக்க : தொடர்ச்சியாக பிஎஃப் அட்வான்ஸ் பெற முடியுமா? என்ன காரணங்களுக்கு அட்வான்ஸ் பெற முடியும்?




கடந்த ஜூலை 8, 2025 அன்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா, 2024-25 நிதியாண்டுக்கான வட்டியை இந்த வாரத்துக்குள் உறுப்பினர்களின் கணக்குகளில் சேர்க்கும் பணியை இபிஎஃப்ஓ நிறைவு செய்யும் என்று பேசினார்.
வட்டி என்பது மாதம்தோறும் நமது கணக்கில் சேர்க்கப்படும் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டி சேர்க்கப்படும். சில நேரம் வட்டி பாஸ்புக்கில் தாமதமாக சேர்க்கப்படலாம். ஆனால் உங்கள் பணம் வளர்ச்சியடைந்துகொண்டே இருக்கும்.
ஆனால் பிஎஃப் தொகையில் வட்டி சேர்க்கப்படுவதற்கு முன், பணம் எடுத்தால் அதற்கான வட்டி உங்கள் கணக்கில் சேர்க்கப்படாது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வட்டி சேர்ந்த பிறகு தேவை என்றால் பணம் எடுப்பது சிறந்தது. அதே போல தொடர்ச்சியாக செயல்படாத கணக்குக்கு வட்டி கிடைக்காது. இதனால் உங்கள் கணக்கை சரியாக பராமரிக்க வேண்டும். நாம் பணியாற்றும் நிறுவனம், நமது கணக்கில் முறையாக பணம் செலுத்துகிறதா என ஒருமுறை சோதனை செய்வது அவசியம்.
இதையும் படிக்க : மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் அமல்!
உங்கள் கணக்கில் வட்டி சேர்க்கப்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
- ஆதார், பான் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் இபிஎஃப்ஓவில் சரியாக இணைக்கப்பட்டுள்ளனவா என ஒருமுறை பரிசோனை செய்துகொள்ளலாம்.
- எல்லாம் சரியாக இருந்தால் இபிஎஃப்ஓ தளத்தில் புகார் அளிக்கலாம்.
- ஆன்லைனில் உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், அருகில் உள்ள இபிஎஃப்ஓ அலுவலகத்தில் முறையான ஆவணங்களுடன் சென்று புகார் அளிக்கலாம்.
- ஆன்லைனில் தீர்வு கிடைக்கவில்லை என்றால், உங்கள் பகுதிசார்ந்த EPFO அலுவலகத்தில் தேவையான ஆவணங்களுடன் நேரில் செல்லலாம்.