மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்.. ஆகஸ்ட் 1 முதல் அமல்!
Indian Government's 1 Lakh Crore Rupees ELI Scheme | இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ரூபாய் 1 லட்சம் கோடி மதிப்பில் வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ திட்டத்தை மாத்தி அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேலைவாய்பை அதிகரிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ (ELI – Employment Linked Incentive) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், தற்போது இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்
சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ரூபாய் 1 லட்சம் கோடி மதிப்பில் வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ திட்டத்தை மாத்தி அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3.50 கோடி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் அமைப்புசாரா தொழில் துறைகளில் உள்ளவர்கள், அமைப்பு சார்ந்த கூட்டமைப்புகளுக்கு கொண்டுவரப்படுவார்கள் என்றும் இதனை தகுதியான அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த திட்டம் வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு பயனளிப்பதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும். இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழிலாளர்களை சேர்க்கும் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத தொழில் நிறுவனங்களில் உரிமையாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சம்பளத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை
ரூபாய் 10,000 வரை சம்பளம் பெரும் தொழிலாளர்களை நிறுவனத்தில் சேர்க்கும் போது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ.1,000 வீதமும், ரூ. 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கும் தொழிலாளர்களை சேர்க்கும்போது ரூபாய் 2,000 வீதமும் 20 ஆயிரத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை சேர்க்கும் பட்சத்தில் ரூபாய் 3,000 வரையிலும் நிறுவன உரிமையாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இந்த திட்டம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.