Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓய்வு காலத்தில் ரூ.75,000 மாத வருமானம் வேண்டுமா? சிறந்த பிபிஎஃப் திட்டம் இதோ

PPF Investment Made Simple : வருங்கால வைப்பு நிதி திட்டம் அரசு ஆதரவு பெற்றதால் நமக்கு நிதி பாதுகாப்பு, வரி சலுகை ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் நன்மைகள், மற்றும் ஓய்வு காலத்தில் மாத வருமானம் ரூ.75,000 பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓய்வு காலத்தில் ரூ.75,000 மாத வருமானம் வேண்டுமா? சிறந்த பிபிஎஃப் திட்டம் இதோ
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 06 Jul 2025 19:11 PM

முதலீடு (Investment), வரிவிலக்கு, பாதுகாப்பு ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் வழங்கக்கூடிய அரசின் ஆதரவு பெற்ற நிதி திட்டம் தான்  வருங்கால வைப்பு நிதி திட்டம் (Public Provident Fund – PPF ). மாத வருவாய் குறைவாக வாங்கும் நபர்களாக இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை ஒதுக்கி, ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தாலே, ஓய்வு காலத்தில் நல்ல லாபம் பெறலாம். இதற்கு வருமான வரியும் கட்டத் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு. நீண்ட கால நிதி திட்டமான இதில் தொடர்ந்து குறிப்பிட்ட தொகையை 28 ஆண்டுகளில் முதலீடு செய்தால் மாதம் ரூ.75,000 வருமானம் பெற முடியும். இது ஓய்வு காலத்தில் நிதி சுதந்திரத்தை அளிக்கும். இந்த கட்டுரையில் இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன?

வருங்கால வைப்பு நிதி திட்டம் மத்திய அரசின் ஆதரவில் இயங்கும் ஒரு நிதி சேமிப்பு திட்டம். இதன் மூலமாக வரி விலக்குடன் கூடிய நிலையான வருமானம் பெற முடியும். இது 1968ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். நிதிபாதுகாப்பு, நிலையான வட்டி, வரி சலுகை, நீண்ட கால பலன் ஆகியவற்றின் காரணமாக, இன்று அதிகமான மக்கள் இந்த திட்டத்தை அதிகம் விரும்புகிறார்கள்.

இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?

ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் தொகையை, 28 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொண்டால், தற்போதைய வட்டி விகிதமான 7.1 சதவிகிதத்தை கணக்கில் கொண்டு, இறுதியாக ரூ.1.3 கோடி லாபம் கிடைக்கும். இதனை மாத வருமானமாக கணக்கிட்டால் ரூ.75,000 கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலில் 15 ஆண்டுகளுக்கு தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு 5 வருடங்களாக கால அளவை நீட்டிக்கலாம். மேலும் இதில் வட்டி விகிதம் மாற்றத்துக்குரியது. எனவே அது காலத்துக்கு ஏற்ப அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த திட்டத்தில் முழுக்க வரி விலக்கு உண்டு.

யார் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்?

இந்த திட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட சுயதொழில் செய்வோர், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களை தேடும் குடும்ப தலைவர்கள் ஆகியோர் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் 20 முதல் 30 வயதிற்குள் முதலீடு செய்யத் தொடங்கினால், அதிக காலம் முதலீடு செய்யலாம். இதனால் வட்டி விகிதம் மூலம் நமது முதலீடு பல மடங்கு வளர்ச்சி பெறும். அதனால் எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ நமக்கு அவ்வளவு நல்லது. ஓய்வு காலத்தில் நிதி தேவைப்படுவோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

 முக்கியமாக கவனிக்க வேண்டியவை:

இந்த திட்டத்தில் வட்டி விகிதத்தை அரசு தீர்மானிப்பதால், அவ்வப்போது மாற்றம் ஏற்படலாம். நீண்ட காலம் பொறுமை தேவைப்படும் திட்டம். இதனால் இடையில் விலகினால் முழுமையான பலன் கிடைக்காது. கணக்கை முறையாக பராமரிக்க வேண்டும். அதாவது சரியான நேரத்தில் பணம் செலுத்த வேண்டும். முதலீட்டுக்கு முன் நிதி ஆலோசகரை அணுகி திட்டம் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது.