பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?.. அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன?
Petrol Diesel Price Rise | ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோ மற்றும் டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மேற்கு ஆசியா போர் காரணமாக கச்சா எண்ணெய் (Crude Oil) கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol and Diesel Price) உயரும் சூழல் உருவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பான தொடர் கேள்விகள் எழுந்து வரும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் உச்சத்தில் இருக்கும் கச்சா எண்ணெய்
பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக ஏற்பட்ட மோதல் காரணமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக உலக நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.
இதையும் படிங்க : வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?
அதாவது, 2025 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் வெறும் 70 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 126 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் சூழல் உருவானது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் எப்ரல் 29, 2026 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.25 முதல் ரூ.28 வரை உயர திட்டமிட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?
மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக மே 01, 2026 அன்று வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 உயர்வை சந்தித்து, ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தபடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் என பரவலாக பேசப்பட்டாலும் அது குறித்து அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்படவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.