2026ம் ஆண்டின் முதல் நாளிலேயே சிலிண்டர் விலை உயர்வு..
LPG Price Hike: 2026ம் ஆண்டின் முதல் நாளான இன்று, எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்துள்ளன. அதாவது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை கடந்த 2 மாதங்களாக குறைந்த நிலையில், இந்த மாதம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

2026ம் ஆண்டின் முதல் நாளிலேயே சிலிண்டர் விலை உயர்வு
சென்னை, ஜனவரி 01: நாடு முழுவதும் கடைகளில் பயன்படுத்தகூடிய வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். இந்த நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 01, 2026) வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.
இதையும் படிங்க : ரூ.18-ல் இருந்து ரூ.72-க்கு உயரும் சிகரெட் விலை?.. புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை திருத்தும் அரசு
கேஸ் சிலிண்டர் விலையில் முக்கிய மாற்றம்:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகள் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 2026ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலையில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு:
அதன்படி, 2026ம் ஆண்டின் முதல் நாளான இன்று, எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்துள்ளன. அதாவது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை கடந்த 2 மாதங்களாக குறைந்த நிலையில், இந்த மாதம் அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்தவகையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் ரூ.1,739.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.110 அதிகரித்து ரூ.1,849.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : EPFO : பணியில் இருந்து விலகினாலும் பிஎஃப் கணக்குக்கு வட்டி வழங்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை:
சென்னையை தொடர்ந்து மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பகுதிகளிலும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சென்னையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2025 ஏப்ரல் மாதம் முதல் வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி ரூ.868.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.