Gold Price : ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
Gold Price Reduced 3040 Rupees Per Sovereign | ஈரான் போர் காரணமாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று 22 காரட் தங்கம் ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்துள்ளது.
ஈரான் போர் (Iran War) காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த மூன்று மாதங்களுக்கு மேலான போர் முடிவுக்கு வந்துள்ளது. அதாவது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இன்று (ஜூன் 19, 2026) சுவிட்சர்லாந்தில் வைத்து அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகிறது. தங்கம் விலை கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தி வந்த ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் இன்று தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.
அதாவது, இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் ரூ.3,040 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன, இனி வரும் நாட்களில் தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஓரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்
ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ள இந்த சூழலில் தங்கம் கடும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் ரூ.13,570-க்கும், சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தங்கம் விலை இன்று ஒரே நாளில் மட்டும் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ள நிலையில், தற்போது தங்கம் வாங்குவது சரியா, தவறா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது.




இதையும் படிங்க : தற்போதைய சூழலில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?
இனி வரும் காலங்களில் தங்கம் விலை என்னவாக இருக்கும்?
தற்போதைய சூழலில் இந்திய தங்க சந்தையில் மந்தமான சூழல் நிலவி வருகிறது. அதாவது, ஆபரண தங்கத்திற்கான தேவை குறைந்து, இறக்குமதி சரிவு மற்றும் ஈடிஎஃப் முதலீடுகளில் லாபம் ஈட்டுதல் உள்ளிட்டவற்றின் காரணமாக இத்தகைய சூழல் நிலவுகிறது. ஆனால், தங்கத்தின் இந்த சூழல் விரைவில் மாற உள்ளது. காரணம், முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக 2026, ஆகஸ்ட் மாதம் முதல் தங்கம் விலை மீண்டும் சூடுபிடிக்கும் என உலக தங்க கவுன்சில் (WGC – World Gold Council) கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.