அதிகரிக்கும் போர் பதற்றம்..ஈரானில் இருக்கும் இந்தியர்கள் 48 மணி நேரம் வெளியே செல்ல வேண்டாம் என இந்தியா வலியுறுத்தல்..
இந்த அவசர அறிவிப்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் மீது அவர், “இன்றிரவே ஒரு நாகரிகம் முழுவதும் அழிந்து விடும்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த மிரட்டல், சமூக வலைதளமான Truth Social மூலம் வெளியிடப்பட்டது. “ஈரான் நாகரிகம் இன்று இரவிலேயே இல்லாமல் போகலாம்” என அவர் தெரிவித்தது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 7, 2026: மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு, தற்போது எங்கு உள்ளீர்களோ அங்கேயே தங்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதோடு, மின்சாரம் தொடர்பான அமைப்புகள், ராணுவ தளங்கள் மற்றும் பல்மாடிக் கட்டிடங்களின் மேல் தளங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு:
“தூதரகம் ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள், அங்கிருந்தே வெளியே செல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில், தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்,” என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
இந்த அவசர அறிவிப்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் மீது அவர், “இன்றிரவே ஒரு நாகரிகம் முழுவதும் அழிந்து விடும்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த மிரட்டல், சமூக வலைதளமான Truth Social மூலம் வெளியிடப்பட்டது. “ஈரான் நாகரிகம் இன்று இரவிலேயே இல்லாமல் போகலாம்” என அவர் தெரிவித்தது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போர் குற்றச்சாட்டுகள் குறித்து கவலை இல்லை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், அதன் கட்டமைப்பு வசதிகளை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஈரான் பதில்:
இதற்கு பதிலளித்த ஈரான், “நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் ஈரானின் தொன்மையான நாகரிகத்திடமிருந்து மறக்க முடியாத தாக்குதலை சந்திப்பீர்கள்” என்று எச்சரித்துள்ளது. காலக்கெடு நெருங்கும் நிலையில், அமெரிக்காவுடன் உள்ள அனைத்து பேச்சுவார்த்தை வழிகளையும் முடக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.