அமெரிக்கப் போர்க்கப்பல் ‘ஆபிரகாம் லிங்கன்’ சிதைக்கப்பட்டதா?.. ஈரானின் புகாரும், அமெரிக்காவின் மறுப்பும்..
USS Abraham Lincoln damaged: கடந்த சில நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி படைகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. வளைகுடா பிராந்தியத்தில் போக்குவரத்து முக்கிய மையமான 'ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படுவதும், அதற்குப் பதிலடியாக ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பலான ‘யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) மீது ஈரான் தாக்குதல் நடத்தி அதைக் கடுமையாகச் சேதப்படுத்தியதாக ஈரான் தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் கப்பல் அமெரிக்கக் கடற்படையின் ஒரு நடமாடும் ராணுவத் தளம் போன்றது. இதில் டஜன் கணக்கான போர் விமானங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்கள் இருப்பார்கள். இந்தக் கப்பல் சேதமடைந்தால், அது அமெரிக்காவிற்குப் பெரும் கௌரவப் பின்னடைவாகக் கருதப்படும். இதனால்தான், ஈரான் இதன் மீதான தாக்குதலை ஒரு பெரிய வெற்றியாகச் சித்தரிக்கிறது.
இதையும் படிக்க: துபாயில் மீண்டும் தாக்குதல்.. புர்ஜ் கலிஃபா அருகே புகை மூட்டம்.. வைரலாகும் வீடியோக்கள்!
ஈரானின் அதிரடி உரிமை கோரல்:
ஈரான் தனது ‘காமிகாஸே’ (Kamikaze) ரக ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் மூலம் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறுகிறது. “அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி எங்களது ஏவுகணைகள் இலக்கை எட்டின” என்பது ஈரானின் வாதம். ஈரான் ராணுவத் தளபதிகள் மற்றும் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலில், “வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தினோம். இதில் கப்பலின் முக்கியப் பகுதி சேதமடைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர். இது ஈரானின் ராணுவ வலிமையைக் காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மறுப்பு:
The Abraham Lincoln Carrier Strike Group continues to support Operation Epic Fury and project power from the sea. pic.twitter.com/2o7krBUp70
— U.S. Central Command (@CENTCOM) March 12, 2026
இந்தக் குற்றச்சாட்டுகளை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் (பென்டகன்) உடனடியாக நிராகரித்துள்ளது. இது குறித்து அமெரிக்க கடற்படை தரப்பில் கூறுகையில், “ஈரான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. எங்களது கப்பல் எந்தவிதமான பாதிப்பும் இன்றி பாதுகாப்பாகவும், செயல்பாட்டுத் திறனுடனும் உள்ளது. ஈரான் இத்தகைய பொய்யான தகவல்கள் மூலம் பிராந்தியத்தில் பீதியை உருவாக்க முயற்சிக்கிறது,” என்று தெரிவித்துள்ளது. அதோடு, கப்பல் முழுத் திறனுடன் செயல்படுவதற்கான வீடியோ ஆதாரங்களை வெளியிடத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. சர்வதேசக் கண்காணிப்பு அமைப்புகளும், செயற்கைக்கோள் படங்களும் தற்போதைக்குக் கப்பலில் பெரிய அளவிலான தீ விபத்தோ அல்லது புகை மூட்டமோ காணப்படவில்லை என்றே தெரிவிக்கின்றன.
பதற்றத்தின் பின்னணி:
கடந்த சில நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி படைகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. வளைகுடா பிராந்தியத்தில் போக்குவரத்து முக்கிய மையமான ‘ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்படுவதும், அதற்குப் பதிலடியாக ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
அமெரிக்காவின் போர்க்கப்பலைச் சேதப்படுத்தியதாக ஈரான் கூறிவருவது, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதையே காட்டுகிறது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு:
இந்தச் சூழலில், உலக நாடுகளைப் பொறுத்தவரை, போர் நீடித்தால் பொருளாதார பாதிப்புகள் அதிகமாகும் என்று அஞ்சுகின்றன. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், மறுப்பதும் மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகளைக் குறைத்து வருகிறது.
இதையும் படிக்க: போரின் தாக்கம் – எரிபொருள் மட்டுமல்ல… இண்டெர்நெட் சேவையும் பாதிக்கும் அபாயம் – என்ன காரணம்?
இந்தியாவின் நிலைப்பாடு:
இந்த விவகாரத்தில் இந்தியா மிகவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது. இந்தியாவின் 90% சமையல் எரிவாயு (LPG) இந்தப் பகுதி வழியாகத்தான் வருகிறது. போர் நீண்டால், இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும். இதனால்தான் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.