இந்தியா பாகிஸ்தான் மோதல்.. டிரம்பின் விருப்பம் இதுதான்.. வெள்ளை மாளிகை தகவல்!
US President Donald Trump On India Pakistan Tensions : இந்தியா பாகிஸ்தான் மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பம் குறித்து வெள்ளை மாளிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்கா, மே 10: இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதலை தணிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இருநாடுகளும் இந்த விஷயத்தில் பதற்றத்தை தணிக்க முடிவு எடுக்க வேண்டும் என்றும் டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இருநாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. இந்த ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக 2025 மே 8ஆம் தேதி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றது. காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் என 15 க்கும் மேற்பட்ட இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், அதனை நடுவானிலேயே இந்திய சுட்டு வீழ்த்தியது.
இதனை அடுத்து, மூன்றாவது நாட்களாக இருநாடுகளும் தொடர் தாக்குதல், பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், இந்திய பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. இதனை உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அதே நேரத்தில் ஐ.நா இதுகுறித்து மௌனம் காத்து வருகிறது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பதற்றத்தை தணிக்க இருநாடுகளையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விஷயத்தில் அதிபர் டொனால்டு டிரம்பின் விருப்பம் குறித்து வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
டிரம்பின் விருப்பம் இதுதான்
#WATCH | Washington, DC | On US efforts to mediate in the India-Pakistan conflict, White House Press Secretary Karoline Leavitt says, “This is something that the Secretary of State and now our NSA as well, Marco Rubio, has been involved in. The President has expressed that he… pic.twitter.com/NL55jSFyIM
— ANI (@ANI) May 9, 2025
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், “இது வெளியுறவுத்துறை செயலாளரும் இப்போது நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோவும் ஈடுபட்டுள்ள ஒரு விஷயம். இது விரைவில் தணிய வேண்டும் என்று தான் அதிபர் டிரம்ப் விரும்புகிறார். பல தசாப்தங்களாக இந்திய பாகிஸ்தான் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நாடுகள் என்பதை டிரம்ப் புரிந்து கொள்கிறார்.
அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களுடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்” என்று தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோ வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோருடன் தனித்தனியாகப் பேசினார். இருநாடுகளும் பதற்றத்தைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.